வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க வருகிறது.
‘ஹிந்த் மோட்டார் பைனான்ஷியல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் பியூஜியோ’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து, அம்பாசிடர் காருக்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்துள்ளன.புதிய அம்பாசிடர் கார் மாடல், சென்னையிலுள்ள ‘ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்’ நிறுவன ஆலையில் தயாரிக்கப்படும் என தெரிகிறது.இந்த ஆலை, சி.கே.பிர்லா குழுமத்தின் அங்கமான ஹிந்த் மோட்டார் பைனான்ஷியல் நிறுவனம் வசம் உள்ளது.
இது குறித்து, ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனர் உத்தம் போஸ் கூறியதாவது:புதிய அம்பாசிடர் காரை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய காரின் புதிய இன்ஜினுக்கான மெக்கானிக்கல் மற்றும் வடிவமைப்பு பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
அம்பாசிடர் கார், 1960களிலிருந்து 1990ம் ஆண்டு மத்தி வரை, ஒரு ‘ஸ்டேட்டஸ் சிம்பலாக’ கருதப்பட்டது. குடியரசு தலைவர், பிரதமர் துவங்கி, பலரும் இந்த காரை தான் பயன்படுத்தி வந்தனர்.இதன்பின் புதிய பிராண்டு கார்கள் வரவும், அம்பாசிடர் தன் பொலிவை இழக்கத் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக, 2014ல் தயாரிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இதன்பின் அம்பாசிடர் பிராண்டை, பிரெஞ்சு நிறுவனமான பியூஜியோ வாங்கியது. தற்போது மீண்டும் அம்பாசிடர் பிராண்டு காரை தயாரிக்கும் முயற்சியில் பியூஜியோவும், ஹிந்த் மோட்டார் பைனான்ஷியல் கார்ப்பரேஷனும் இறங்கி உள்ளன.
Advertisement