ஆக்ரா: தாஜ்மஹால் வளாகத்தினுள் அமைந்துள்ள மசூதியில், விதிகள் மீறி தொழுகை நடத்தியதற்காக சுற்றுலா பயணிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் அமைந்துள்ள மசூதியில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) நான்கு சுற்றுலா பயணிகள் தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தியதாக கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து ஆக்ரா நகர எஸ்பி கூறுகையில், “கைதானவர்களில் மூன்று பேர் தெலங்கானவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அங்கு பாதுகாப்புக்கு இருந்தவர்கள் ஆறு பேர் தொழுகை நடத்தியதை பார்த்துள்ளனர். அவர்களில் இருவர் கூட்டத்தில் தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தாஜ்கஞ்ச் காவல்நிலைத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
முஸ்லிம்கள் தொழுகை நடத்தியதைத் தொடர்ந்து இந்து அமைப்பினர் தாஜ்மஹால் வளாகத்தினுள் தேஜோ மஹாலயா ஆலயம் இருப்பதாகக் கூறி, அங்கு வழிபாடு நடத்த அனுமத்திக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதுகுறித்து ராஷ்டிரிய இந்து பரிஷத் (பாரத்) அமைப்பின் தலைவர் கோவிந்த் பராசர் கூறிகையில், “தாஜ்மஹாலில் தொழுகை நடத்தியதன் மூலம் அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி உள்ளனர். தொழுகை நடத்தியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவி உடை அணிந்து வந்த எங்கள் குருமார்கள் வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டு, உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆனால் உள்ளே தொழுகை நடத்துபவர்கள் மீண்டும் மீண்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல தொடர்ந்து நடந்தால் நாங்களும் உள்ளே இருக்கும் தேஜோ மஹாலயா கோயிலில் பூஜை செய்வோம்” என்றார்.
நினைவுச்சின்னத்தில் எந்த புதிய நடைமுறையையும் தொடங்க முடியாது என்று தெரிவித்த ஆக்ரா பகுதி தொல்லியல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல், “தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தொழுகை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவில் நம்பிக்கை இல்லாதவர்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் அங்கு தொழுகை நடத்துவதை இந்திய தொல்லியல்துறையால் அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தார்.