சென்னை: சபதம் போட்டு பா.ஜ.க பிரமுகரைக் கொலை செய்த கும்பல்!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரின் மகன் பாலசந்தர். இவர் பா.ஜ.க-வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்தார். இவர்மீது காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பாலசந்தரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தததால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி சிந்தாதிரிப்பேட்டையில் பாலசந்தரை மர்மகும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவுசெய்த சிந்தாதிரிப்பேட்டை போலீஸார், தப்பி ஓடியவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர்.

கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பாலசந்தர்

தனிப்படை போலீஸார் சிசிடிவி, செல்போன் சிக்னல் மூலம் கொலை செய்தவர்களைத் தேடிவந்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார், எடப்பாடிக்குச் சென்று அங்கு பதுங்கியிருந்த பிரதீப், சஞ்சய், கலை, ஜோதி ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட பா.ஜ.க நிர்வாகி பாலசந்தரின் உறவினர்கள், சிந்தாதிரிப்பேட்டையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த தர்கா மோகனின் மகன்கள் பிரதீப், சஞ்சய் ஆகியோர் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்தத் தகவலைத் தெரிந்த பாலசந்தர், பிரதீப், சஞ்சய் தரப்பை கண்டித்துள்ளார். அப்போது பாலசந்தருக்கும் பிரதீப் தரப்புக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. பிரதீப், சஞ்சய் ஆகியோர் தங்களின் கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலசந்தரை கொலை செய்ய திட்டமிட்டனர். அதற்கு முன்பு பாலசந்தரைக் கொலை செய்யபோவதாக அவரின் உறவினர்களிடம் பிரதீப் தரப்பு கூறியதோடு சபதமிட்ட தகவல் கிடைத்துள்ளது.

கைதான பிரதீப்

பிரதீப் தரப்பால் பாலசந்தரின் உயிருக்கு ஆபத்து என தெரிந்ததாலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாரை நம்பி தைரியமாக அவர் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நடமாடியுள்ளார். பாலசந்தரின் பாதுகாப்பு காவலர் பாலகிருஷ்ணன், டீ குடிக்கச் சென்ற நேரத்தில் அவரைக் கொலை செய்து விட்டு தப்பியுள்ளது. இந்த வழக்கில் நான்கு பேரைக் கைது செய்துள்ள நிலையில் இன்னும் சிலரைத் தேடிவருகிறோம். கைதானவர்கள் மீது ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அரசியல் ஆதாயத்துக்காக இந்த கொலை நடக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம். கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.