திருப்பூர்: திருப்பூரில் கலைஞர் கிராம உணவகத்தை அதிமுக எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் இன்று திறந்துவைத்தார்.
திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சி. இங்கு ஊராட்சி மற்றும் பொதுமக்களுடன் இணைந்து ‘கலைஞர் கிராம உணவகத்தை’ வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் திறந்துவைத்தார். கணக்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஊராட்சியின் கட்டிடத்தில் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளுடன், உணவகம் திறக்கப்பட்டது.
இதில் மேயர் ந.தினேஷ்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ”கலைஞர் உணவகத்தில், மதிய உணவை முதல்கட்டமாக வழங்குகிறோம். சாம்பார், புளி, எலுமிச்சை, வெஜ்பிரியாணி, தயிர் சாதங்களை ரூ.10-க்கு வழங்குகிறோம். இனி வரும் நாட்களில் காலை மற்றும் இரவு உணவை வழங்க திட்டமிட்டுள்ளோம். தனியார் அமைப்பின் உதவியுடன் இதனை செய்துள்ளோம்” என்றனர்.
அம்மா உணவகங்களுக்கான பொருட்கள் மற்றும் நிதி குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் கலைஞர் உணவகத்தை திறந்து வைத்திருப்பது, அதிமுகவினர் மட்டுமின்றி திமுகவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.