தமிழகத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி பின்னர் நிகழ்ச்சியில் பேசியதாவது, “வணக்கம்., ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ தமிழக மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் அத்தனையும் சிறப்பு வாய்ந்தது. இது மிகவும் சிறப்பான பூமி. இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி சிறப்பானவை. ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டிலிருந்து வரும் எவரேனும் ஒருவர் எப்போதுமே தலைசிறந்தவராக செயல்படுகிறார்.
தேசியக் கல்விக் கொள்கையால் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை மாணவர்கள் தாய்மொழியில் படிக்க முடியும். மத்திய அரசின் சார்பில் இலங்கைக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணத்துக்கு சென்ற ஒரே இந்திய பிரதமர் நான் மட்டும் தான். இலங்கைக்கு பொருளாதார ஆதரவு அளிப்பது, அந்நாட்டு அனைத்து மக்களுக்கும் இந்தியா துணை நிற்கும்.
சென்னை பெங்களூர் விரைவு சாலை இரு முக்கிய நகரங்களில் வளர்ச்சியை ஏற்படுத்தும். சென்னை துறைமுகம் மதுரவாயல் 4 வழி உயர்த்தப்பட்ட சாலை மாநகர நெரிசலைக் குறைக்கும். 5 ரயில்வே நிலையங்கள் மேம்பாடு செய்யப்படுகிறது.
பிரதமர் ஆவாஷ் யோஜனா திட்டத்தின்படி வீடுகள் பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். மத்திய அரசால் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைவருக்கும் சென்றுசேர வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன” என்று பிரதமர் மோடி பேசினார்.