26.5.2022
14:00: உக்ரைனின் கிழக்கு பகுதியில் நடக்கும் கடுமையான போர் மற்றும் ரஷிய படைகள் முக்கிய தொழில்துறை நகரத்தை சுற்றி வளைக்க நெருங்கி வரும் நிலையில், இந்த போரில் வெற்றி பெறுவதற்கு உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் போதுமான உதவிகள் செய்யவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
எந்த வரம்புகளும் இல்லாமல் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், குறிப்பாக கனரக ஆயுதங்களை அனுப்பவேண்டும் என தெரிவித்தார்.
13:00: உக்ரைன் ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக கருங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்தை ரஷியா அனுமதிக்க உள்ளது. இவ்வாறு உக்ரைனுக்கு உதவுவதற்கு ஈடாக, ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கப் போவதில்லை என்று அமெரிக்கா கூறுகிறது.
11.14: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் சீவிரோடோனெட்ஸ்க் மற்றும் லைசிசான்ஸ்க் நகரங்களை முற்றுகையிட்டுள்ளது.
அந்த இரு நகரங்களையும் மூன்று பக்கங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த இரு நகரங்களையும் பிடித்துவிட்டால் லுஹான்ஸ்க் மாகாணம் முழுவதும் ரஷியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
08.53: கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன், ரஷியா போரினை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து இருநாட்டு தூதரகங்களும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அமைதி உடன்படிக்கைக்காக ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து உக்ரைன் வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் தொடரும் என கூறினார்.
06.00:உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட, உக்ரைனுக்கான அமைதித் திட்டம் ஒன்றை இத்தாலி முன்மொழிந்துள்ளது. ஆனால் இந்த திட்டம் வெறும் கற்பனையாகவே போய்விடும் என ரஷியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா விமர்சித்துள்ளார்.
02.00: டாவோசில் நடைபெற்று வரும் உலக வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ சொரோஸ் பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு மூன்றாவது உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லலாம். அத்தகைய போர் மனித குலத்தை முழுமையாக அழித்துவிடும். எனவே, மனிதகுலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இப்போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். விளாடிமிர் புதின் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்.