கரூர்: கரூர் மாரியம்மன் கோயில் அமராவதி ஆற்றுப் பகுதியில் கம்பம் ஆற்றில் விடும் இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் பேரிகார்டில் ஏறி குதித்து எம்.பி. ஜோதிமணி நுழைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரின் பிரசித்திப்பெற்ற விழாவான கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, எஸ்.பி. ப.சுந்தரவடிவேல், கரூர் மேயர் கவிதா, துணைமேயர் ப.சரவணன், கோட்டத்தலைவர் எஸ்.பி.கனகராஜ், மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் எம்.பி. செ.ஜோதிமணி கோயிலுக்கு வந்தப்போது கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வில் பெண்களுக்கு கோயிலினுள் அனுமதி இல்லை எனக் கூறி அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கம்பத்திற்கு முன்பாகவே ஜோதிமணி கம்பம் ஆற்றில் விடும் இடம் இடத்திற்கு சென்றார். கம்பம் ஆற்றில் விடுவதற்காக செயற்கை குளம் தோண்டப்பட்டு தண்ணீர் விடப்பட்டு, கட்டைகள் மற்றும் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இப்பகுதியினுள் இருந்த போலீஸார் ஜோதிமணியை கம்பம் இடம் இடத்தற்குள் அனுமதிக்காததால் ஆவேசமடைந்த அவர், பேரிகார்டில் ஏறி குதித்து கம்பம் ஆற்றில் விடும் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எம்.பி ஜோதிமணியின் கருத்தறிய அவரை செல்போனில் தொடர்புகொண்ட போது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.