சென்னை: சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். தமிழ் மொழி, கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் நெடுஞ்சாலை, ரயில்வே துறையில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஹைதரபாத்தில் இருந்து மாலை 4.56 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வந்த பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட பிரதமர் மோடி, மாலை 5.45 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்குக்கு வந்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்று பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து சென்னை – பெங்களூரு அதிவிரைவு சாலை, சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம், எழும்பூர் உள்ளிட்ட 5 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கல், பன்மாதிரி சரக்கு போக்குவரத்து பூங்கா உள்ளிட்ட 6 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அத்துடன், நிறைவுபெற்றுள்ள மதுரை -தேனி அகல ரயில்பாதை, தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 3-வது ரயில்பாதை மற்றும் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
சென்னை பெரும்பாக்கத்தில் மத்திய, மாநில அரசு நிதியில் கட்டப்பட்ட குடியிருப்புகளை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் பிரதமர் வழங்கினார்.
பின்னர் பிரதமர் மோடி, ‘வணக்கம்’ என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது:
தமிழகத்துக்கு மீண்டும் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிலம் மிகுந்த தனித்துவம் வாய்ந்தது. இங்குள்ள மக்கள், கலாச்சாரம், மொழி ஆகிய அனைத்தும் மிகச் சிறப்பானவை. மகாகவி பாரதியார் இதை ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என அழகாக பாடியுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர். சமீபத்தில் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பெற்ற 16 பதக்கங்களில், தமிழக இளைஞர்கள் 6 பேரின் சிறப்பான பங்களி்ப்பு இருந்தது.
தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. சென்னையில் இருந்து கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென்னாப்பிரிக்கா வரை புத்தாண்டு மற்றும் பொங்கல் காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்ததாக உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில், தமிழகத்தின் மைந்தரான மத்திய அமைச்சர் எல்.முருகன் பாரம்பரிய உடையில் சிவப்பு கம்பள வரவேற்பில் சென்றது உலகத் தமிழர்களை பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் தற்போது மேலும் ஒரு உன்னதமான அத்தியாயத்தை கொண்டாட நாம் கூடியுள்ளோம். ரூ.31,000 கோடிக்கு மேற்பட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
சென்னை – பெங்களூரு விரைவு சாலை இரண்டு முக்கியமான வளர்ச்சி மையங்களை இணைக்கிறது. மதுரவாயல் மேம்பால திட்டம், சென்னை துறைமுகத்தை திறன்மிக்கதாக மாற்றுவதுடன், போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும்.
வீட்டு வசதி திட்டம்
பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் வீடுகள் பெற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். இது எங்கள் அனைவருக்கும் நிறைவு தரும் திட்டமாகும். பன்மாதிரி சரக்கு பூங்காக்கள், பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும்.
உள்கட்டமைப்பு வசதிக்கு முக்கியத்துவம் அளித்த நாடுகள்தான் வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன. அந்த வகையில், தலைசிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு கிராமத்துக்கும் அதிவேக இணைய வசதி அளிப்பது தொலைநோக்கு பார்வையாக உள்ளது. தேசிய கட்டமைப்பு திட்டமானது, ரூ.100 லட்சம் கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ் மொழி, கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்த மத்திய அரசு முழு முயற்சிகளை எடுத்து வருகிறது. எனது தொகுதியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் தமிழ் இருக்கை அமைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் இந்திய மொழிகளை ஊக்குவிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மூலம், தொழில்நுட்பம், மருத்துவப் படிப்புகளை உள்ளூர் மொழிகளில் படிக்க முடியும். தமிழக இளைஞர்கள் இதில் பயனடைவர். அண்டை நாடு என்ற வகையில், இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கிறது. ஜனநாயக ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பில் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவை பலமானதாகவும், வளமானதாகவும் ஆக்குவோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பிரதமரின் உரையை சென்னையில் உள்ள அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சி நிர்வாகி சுதர்ஷன் தமிழில் மொழி பெயர்த்தார். மோடியின் உரையை அச்சு பிசகாமல் அப்படியே அவர் மொழி பெயர்த்தது அனைவரையும் ஈர்த்தது. பிரதமரின் மன் கி பாத் உரையை தமிழில் மொழிபெயர்ப்பவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.