பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி இன்று விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பாக களப்பணியாற்றுபவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களைப் போன்று தீவிரமாக களப்பணியாற்ற மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல்வீரர்கள் விருது கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. 2020-ஆம் ஆண்டில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 5 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் 2020-ஆம் ஆண்டில் அறிவித்திருந்தார்.
அதன்படி 2021-ஆம் ஆண்டுக்கான பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல் வீரர் விருதுகளைப் பெறுவதற்கான 5 செயல்வீரர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்.
அவர்களின் விவரம் வருமாறு:
1. திரு. வடிவேல் இராவணன், பொதுச்செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி
2. திரு. இசக்கி படையாட்சி, தலைமை நிலையச் செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி
3. திரு. இராம. முத்துக்குமார், பொதுச்செயலாளர், பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை
4. திரு. அருள் இரத்தினம், பொதுச்செயலாளர், பசுமைத் தாயகம்
5. திரு. தட்டானோடை செல்வராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர், கடலூர்
பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளின் களப்பணி, தலைமையால் வழங்கப்படும் பணிகளை சிறப்பாக செய்தல், கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுதல் உள்ளிட்ட பணிகளை அளவீடு செய்து அவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது பாராட்டுப் பத்திரம் மற்றும் ஒரு சவரன் தங்கக் காசு கொண்டதாக இருக்கும். வரும் 28.05.2022 சனிக்கிழமை காலை சென்னை திருவேற்காட்டில் நடைபெறவுள்ள பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இவற்றை மருத்துவர் அய்யா அவர்கள் வழங்குவார்.
2020-ஆண்டுக்கான பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல்வீரர்கள் விருது கீழ்க்கண்டவர்களுக்கு வழங்கப் படும் என்று கடந்த 25.12.2020 அன்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களின் பெயர் விவரம் வருமாறு:
1. முனைவர் ச.சிவப்பிரகாசம், தலைவர், சமூக முன்னேற்ற சங்கம்
2. திரு. மீ.கா. செல்வக்குமார், தேர்தல் பணிக்குழு செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி
3. திரு. திருத்துறைப்பூண்டி டி.எஸ்.ஆர்.எம். சுப்பிரமணிய அய்யர், மாநில துணைத்தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி
4. திருமதி. நிர்மலா ராசா, மாநிலத் தலைவர், பா.ம.க. மகளிர் அணி
5. திரு. பி.வி. செந்தில், மாவட்ட செயலாளர் (தருமபுரி – கிழக்கு), பா.ம.க.,
கொரோனா நோய்ப்பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக 2020-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அப்போது வழங்கப்படாத நிலையில், அவற்றையும் பா.ம.க. பொதுக்குழுவில் மருத்துவர் அய்யா அவர்கள் வழங்குவார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் பா.ம.க. சிறந்த செயல்வீரர் விருதுகள் அறிவிக்கப் படுகின்றன. விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் பா.ம.க. தலைமை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 2022-ஆம் ஆண்டில் பா.ம.க. செயல்வீரர் விருதுகளைப் பெறுவதற்காக அனைத்து நிலை நிர்வாகிகளும் கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அந்த அறிவிப்பில் ஜி கே மணி தெரிவித்துள்ளார்.