திருச்சி மாவட்டம் மணப்பாறை அண்ணாவிநகரை சேர்ந்த அஸ்வின், முரளி, மணிகண்டன் ஆகிய மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். அவரது குடும்பத்தினருக்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் கருணை அடிப்படையில் உதவிட வேண்டும் என்பதை அரசிற்கு வலியுறுத்துகிறேன். பேரறிவாளன் சட்டத்தின் வரம்புக்குட்பட்டு விடுதலை செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் அது தர்மத்தின் வரம்புக்கு உட்பட்டது அல்ல. சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவில் 25 வருடங்களுக்கு மேல் பலர் உள்ளனர். அனைவரையும் விடுவிக்க முடியுமா.? பேரறிவாளன் தமிழர் என்பதால் விடுதலை என்றால், வீரப்பனின் அண்ணன் என்ன ரஷ்யாவை சேர்ந்தவரா? தமிழர் என்பதால் விடுதலை என்பது காங்கிரசுக்கு ஏற்புடையதல்ல.
மத்திய அரசு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம், 5,10 என பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி மக்கள் பாக்கெட்டிலிருந்து எடுத்து கொண்டே இருக்கிறது. தேர்தல் வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்துள்ளனர் இன்னும் கூட குறைக்க வேண்டும். அதே போல சிலிண்டரின் விலையை குறைக்க வேண்டும்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நலத்திட்டங்களை அறிவிப்பதற்காக வருவதாக இருந்தால் மோடி வரட்டும். நான் காங்கிரஸ் காரனாக இருந்தாலும், நான் கோபேக்மொடி என்றெல்லாம் சொல்லவில்லை. நான் கம்பேக் மோடி என்றுதான் சொல்கிறேன். மோடி திரும்ப வாங்க, வந்து தமிழக மக்களுக்கு வசதிகளை செய்து கொடுங்கள். புதிய திட்டங்களை கொடுங்கள். வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுங்கள். அதுதான் எனது வேண்டுகோள். வாங்க மக்களுக்கு ஏதாவது நல்லது செய்து கொடுங்கள் என கூறினர்.