ஹைதராபாத்: குடும்ப வாரிசு அரசியல் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் ஒரு மணியளவில் ஹைதராபாத் பேகம்பேட்டை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் பேகம்பேட்டில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
உங்கள் அன்பே எனது பலம். நம்பிக்கை. வீரத்திற்கு மாற்றுப் பெயர் தெலங்கானா மக்கள். தெலங்கானாவை தொழில்நுட்ப மாநிலமாக மாற்றுவோம். தெலங்கானாவின் வளர்ச்சி இளைஞர் கையில்தான் உள்ளது. தெலங்கானா மாநில போராட்டம் ஒரு குடும்பத்துக்காக நடைபெறவில்லை. தெலங்கானாவின் ஒவ்வொரு பாஜக தொண்டரும் வல்லபபாய் படேல் காட்டிய வழியில் நடக்க வேண்டும்.
இளைஞர் சக்தியால் தெலங்கானாவை சக்திமிகுந்த மாநிலமாக மாற்றிக் காட்டுவோம். சுய லாபத்திற்காக இங்கு அரசியல் நடக்கிறது. தெலங்கானாவை பின்னுக்குத் தள்ளும் சக்தி அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. பாஜகவின் போராட்டம் நல்ல தெலங்கானா மாநிலம் அமைய வேண்டும் என்பதே.
தெலங்கானாவில் மாற்றம் கட்டாயம் வரும். குடும்ப அரசியலால் தெலங்கானாவை கட்டிப் போட நினைக்கிறார்கள். அது நடக்காது. ஏதாவது செய்து அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள ஒரு குடும்பம் படாத பாடுபடுகிறது. குடும்ப வாரிசு அரசியல் மாநிலங்களுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் கேடு விளைவிக்கும். வாரிசு அரசியலை எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
தெலங்கானாவில் அடுத்து அமைய போவது பாஜக ஆட்சிதான். தெலங்கானா மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் தங்கள் மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவே நினைக்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்கள் இங்கு பெயர் மாற்றப்பட்டு அமல்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் மாநில அரசு லாபமடைய நினைக்கிறது. நாங்கள் மக்கள் பக்கம் உள்ளோம். ஜன்தன் யோஜனா, கிசான் சம்மான் போன்ற நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு உதவி புரிந்து வருகிறோம். தெலங்கானாவில் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடப்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தெலங்கானாவிற்காக பாஜகவின் 3 தொண்டர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். 8 ஆண்டுகள் மக்களுக்காக பணியாற்றினோம். இனியும் பணியாற்றுவோம்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
இதையடுத்து இண்டியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் (ஐஎஸ்பி) கல்லூரியில் 20-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.