பெங்களூரு
முன்னாள் பிரதமர் தேவகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அங்கு சந்திரசேகர ராவுக்கு மதிய உணவு பரிமாற்றப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முடிந்து சந்திரசேகர ராவ் விமானம் மூலம் ஐதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார். அவர் புறப்படும் முன்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்தேன். நாட்டின் தற்போதையை நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 2, 3 மாதங்களுக்கு பிறகு நீங்கள் பரபரப்பான செய்தியை பார்க்க போகிறீர்கள்.
கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு பெங்களூரு வந்திருந்தேன். குமாரசாமி முதல்-மந்திரி ஆவார் என்று கூறினேன். அது உண்மையானது. அரசியலில் தேசிய அளவில் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. நாட்டில் போதுமான வளங்கள் உள்ளன. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் குடிநீர், மின்சார பிரச்சினை ஏற்படுகிறது. இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த நாடுகள் நம்மை விட முன்னேறி இருக்கின்றன. இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாடு வளர்ச்சியில் ஒளிரும். இந்த நோக்கத்தில் நாட்டை கட்டமைப்பதில் ஒவ்வொரு கட்சியும் கைகோர்க்க வேண்டும். ஒளிமயமான இந்தியாவை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
நாடு மோசமான நிலையை நோக்கி செல்வதால், நாம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். விவசாயிகள், ஆதிதிராவிடர்கள் என யாரும் மகிழ்ச்சியாக இல்லை. பிரதமர் மோடி பேசுவதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை. வெறும் வாக்குறுதிகள் மட்டும் கொடுக்கிறார்கள். தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன. நாட்டின் வளர்ச்சி சரிவை சந்தித்து வருகிறது. பணவீக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது. பண மதிப்பு முழுமையாக சரிந்து வருகிறது. வரலாற்றில் பண மதிப்பு இவ்வாறு வீழ்ந்தது எப்போதும் நடக்கவில்லை.
இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.
சந்திரசேகரராவ், தேவேகவுடாவுடன் சந்தித்து இருப்பதன் மூலம் தேசிய அளவில் மெகா கூட்டணி அமையும் என்று கூறப்படுகிறது. இதை அவரும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
குமாரசாமி கூறும்போது, ‘அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சந்திரசேகர ராவ் தேவேகவுடாவுடன் விவாதித்தார். 2, 3 மாதங்களில் நல்ல செய்தி கிடைக்கும். மாநில கட்சிகள் வளர்ந்து வருகின்றன. பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து நாட்டின் நலனுக்காக ஓரணியில் திரள வேண்டும். காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது.
சந்திரசேகர ராவ் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல பலனை வழங்கும்’ என்றார். இந்த சந்திப்பு குறித்து தேவேகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் என்னை நேரில் சந்தித்து பேசினார். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் கருத்துகளை பரிமாறி கொண்டோம். இந்த சந்திப்பு உண்மையாகவும், மனப்பூர்வமாகவும் அமைந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.