செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் தொடர்: 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா

சென்னை:
உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றார். இதில் கால் இறுதி சுற்றில், பிரக்ஞானநந்தா 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யியை வீழ்த்தினார். அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை டை பிரேக்கர் சுற்றில் 1.5 – 0.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து இறுதி போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா சீன வீரர் டிங் லிரனை சந்தித்தார். இந்த போட்டியில் முதல் செட்டை சீன வீரர் திங் லிரன் கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டுக்கான போட்டியில் அவர் திறமையாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால், 1-1 என்ற செட் கணக்கில் போட்டி சமன் அடைந்தது. 
இதை தொடர்ந்து டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் சிறிய தவறினால் சீன வீரர் திங் லிரனிடம் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். இருப்பினும், இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றதனால், சாம்பியன்ஸ் செஸ் டூர் போட்டிகளில் முதன்முறையாக பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதையடுத்து சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ந்தேதி தொடங்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் பிரக்ஞானந்தா பங்கேற்கவுள்ளார். இந்த போட்டியில் 160க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 303 அணிகள் பதிவு செய்துள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.