பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள்.. நகர மறுத்து அடம்பிடித்த ரூபாலி யானை.. நெகிழ்ச்சி சம்பவம்

மதுரையில் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தனியார் வளர்ப்பு யானையை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ய வந்தனர்.
மதுரை தமுக்கம் மைதானம் அருகே கமலா நகரில் உள்ள மாலா என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பீகாரிலிருந்து ரூபாலி என்ற பெண் யானையை வாங்கி வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் முறையான அனுமதி இல்லாமலும் ஆவணங்கள் இல்லாமலும் யானையை வாங்கி வந்து வளர்ப்பதாக புகார் எழுந்தது.
image
இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் யானை வளர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து யானை உரிமையாளர் தரப்பில் நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் யானை வாங்கியது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வளர்ப்பு யானை ரூபாலி உரிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தலைமை வன பாதுகாவலர் உத்தரவின்படி யானையை திருச்சியில் உள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்ல வன அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வந்திருந்தனர்.
இதையடுத்து யானையை அழைத்துச் செல்வதற்கான விளக்க நோட்டீஸ் ஒட்டிய வனத்துறையினர், யானையை அழைத்து செல்ல முயன்றபோது யானை உரிமையாளர் மாலா எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
image
வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோது வனத்துறையினர் யானையை அழைத்துச் செல்வதாக குற்றம்சாட்டிய அவர், தற்பொழுது யானைக்கு உடல்நலக் குறைவு உள்ள நிலையில் அதற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் யானையை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என்ற விதிமுறையை வனத்துறையினர் மீறுவதாக கூறி வாக்குவாதம் செய்தார்,
இந்நிலையில், யானையை பறிமுதல் செய்ய தயக்கம் காட்டிய வனத்துறை அதிகாரிகள் பின்னர் அதிகாலையில் யானையை வாகனத்தில் ஏற்றி பறிமுதல் செய்தனர். 4 ஆண்டுகளாக இருந்த இடத்தை விட்டு வாகனத்தில் செல்ல மறுத்த ரூபாலி யானையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.