சென்னை: ஜூலை 1-ம் தேதி முதல் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், பொறியியல் படிபுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அரசு பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” இணையவழி பதிவு எண் 1.7.2022 அன்று தொடங்கப்படவுள்ள அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் 1.7.2022 முதல் பெறப்படுகிறது. இது முதலாம் ஆண்டு சேரக்கூடிய மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர் இது தொடங்கும். அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2 படித்த மாணவர்கள் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான மாணவர் சேர்க்கை தொர்பான அட்டவணையும் இன்று வெளியிடப்படுகிறது.
பாலிக்டெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கொஞ்சம் குறைந்துதான் இருந்தது, தற்போது ஓரளவு பரவாயில்லாமல் இருக்கிறது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் தான் இந்த ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அந்த 10 புதிய பாடத்திட்டங்களும் குறிப்பாக வேலைவாய்ப்பை அதிகரிக்கிற வகையில், மாணவர்கள் விரும்பும் வகையில் அவை அமையவிருக்கின்றன.
நீட் தேர்வு முடிவுக்குப் பின்னர் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். பொறியியல் படிப்புகளுக்கு நேரடியாக விண்ணப்பிப்பது மாணவர்களுக்கு கடினம். எனவே ஆன்லைனில் அனைவரும் விண்ணப்பிக்க அனைத்து அரசுப்பள்ளிகளிலும் அதற்கான வசதிகளை செய்துதர பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுதவிர 100 இடங்களில் இருந்து விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே முறைகேடுகள் நடக்காத வகையில், மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பணிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார் .