“வந்துட்டேன்னு சொல்லு… ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எப்படி போனனோ அதே கெத்தோடு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என உலகத்தின் காதுகளில் சென்னை அணி உரக்கக் கூறிய தினம் இன்று. சிறிது காலம் காட்டில் இல்லை என்றாலும் சிங்கம் அக்காட்டுக்கு ராஜா நானே! என கேப்டன் தோனி நிரூபித்த தினம் இன்று. சென்னை அணியின் ஆதிக்கம் முடிந்துவிட்டது என நிம்மதி பெருமூச்சுவிட்டவர்கள் எல்லாம் மிரளும் படியான கம்பேக் ஒன்றை 2018-ம் ஆண்டு கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இரண்டு வருடங்களாக சந்தித்த விமர்சனத்தை எல்லாம் மக்கள் மறந்து போகும்படியான comeback அது.
2015 முதல் 2017 ஆண்டு வரை தோனி சந்தித்த சறுக்கல்கள் சற்று அதிகம்தான். இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் அரையிறுதியுடன் வெளியேறியது, சென்னை அணி தடை செய்யப்பட்டது, கேப்டன் பொறுப்பைத் துறந்தது என அவருக்கு வரிசையாக தேய்பிறையாகவே அமைந்தது. ஐ.பி.எல் தொடரில் புனே அணிக்காக ஆடினாலும் அந்த அணி உரிமையாளருக்கும் தோனிக்கும் முட்டல் மோதல்கள்தான் அதிகமாக இருந்தன. இந்நிலையில் உடைந்துபோன சென்னை சாம்ராஜ்யத்தைக் மீண்டும் கட்டமைக்க காலம் வந்தது. 2018-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட ரசிகர்கள் மீண்டும் பரவச நிலையை அடைந்தனர். அதிலும் தோனி ‘Thala’ என்று எழுதப்பட்ட சி.எஸ்.கே ஜெர்சியை அணிந்து ஒரு புகைப்படம் வெளியானதும் இனி நம்ம ஆட்டம்தான் எனத் தயாராகின சென்னையின் ரசிகர் படைகள்.
2018-ம் ஆண்டு ஏலத்தில் மற்ற அணிகளெல்லாம் அதிரடிக்கு பெயர் போன வீரர்களை எடுக்க சென்னை மட்டும் வயதான, சர்வதேச அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட வீரர்களாக எடுத்தது. வாட்சன், பிராவோ, ராயுடு, ஹர்பஜன், ரெய்னா, தாகீர் என பலரும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். டி20 இளம் வீரர்களுக்கானது, இப்படி ஓடக்கூட தடுமாறும் வீரர்களை வைத்து தோனி என்ன செய்யப் போகிறார் என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதுவும் போக, அரசியல் காரணங்களால் சென்னைக்கு ராசியான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற வேண்டிய ஆட்டங்கள் அனைத்தும் புனேவிற்கு மாற்றப்பட்டன. இப்படி பல விஷயங்கள் அவர்களுக்கு எதிராக அமைந்தாலும், தோனியின் கணக்கு சிறிதும் தப்பவில்லை. பெங்களூரு அணியால் கழட்டி விடப்பட்ட வாட்சன் சதம் அடித்து மிரட்டினார். மும்பையிலிருந்து வந்த ராயுடு 600 ரன்களுக்கு மேல் எடுத்து பலரை பிரமிக்க வைத்தார். ஹர்பஜன், ரெய்னா, தோனி, தாகீர், சஹார், பில்லிங்ஸ், பிராவோ என ஆளுக்கொரு போட்டியை வென்று கொடுக்க சென்னை அணி 14 போட்டிகளில் 9 போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது.
சென்னையின் போட்டி அணிகளாக கருதப்படும் மும்பை, பெங்களூரு எல்லாம் playoffs சுற்றுக்குக் கூட தகுதி பெறாத நிலையில் சென்னை அணி முதல் குவாலிஃபையர் போட்டியில் வென்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாம் குவாலிஃபையர் போட்டியில் வென்று வில்லியம்சன் தலைமையிலான ஐதரபாத் இறுதிப்போட்டிக்கு முன்னேற, இரண்டு கூல் கேப்டன்களின் அணிகளும் இறுதிப்போட்டியில் விளையாடத் தயாராகின. கூடவே மும்பை வான்கடே மைதானமும் தயாரானது.
இரண்டு கேப்டன்களும் களத்திற்கு வர, டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார் தோனி. தீபக் சஹாரின் பவர்பிளே ஸ்விங்கை சமாளிக்க பவர்பிளேயில் பொறுமையாக ஆடினர் ஐதராபாத் அணியின் ஒப்பனர்கள். ஆறு ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு தவான், வில்லியம்சன், ஷகிப் என அனைவரும் ஓரளவு ஆடிக்கொடுத்தாலும் சென்னையை வீழ்த்தும் அளவுக்கான ஸ்கோர் வரவேயில்லை. அடித்து ஆட முற்பட்ட சூழலில் தவான், வில்லியம்சன் என இருவரும் கிளம்ப ஸ்கோர் வேகம் குறைந்தது. 17 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே ஐதராபாத் எடுத்திருந்தது ஃபினிஷிங் வேலைக்காக, ஐபிஎல் தொடர் ஆரம்பித்த காலத்தில் இருந்து வாழும் ‘ஃபினிஷிங் குமார்’ யூசுப் பதானை ஐதராபாத் அனுப்ப அவரும் தன் காரியத்தை கச்சிதமாக செய்தார். நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்களுடன் 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார் யூசுப். 2016-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு பலருக்கும் நினைவில் நிற்கும்படி, மூன்று சிக்சர்களை பறக்க விட்டு 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார் பிராத்வைட். இன்னிங்ஸ் முடிவில் 178 ரன்கள் எடுத்தது ஐதராபாத் அணி.
அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பிக்க, புவனேஸ்வர் குமார் முதல் ஓவர் போட வந்தார். தன் வழக்கமான பாணியில் உள்ளே வெளியே என ஸ்விங் செய்ய திணறிப்போனார் வாட்சன். ஒரு ரன் கூட வாட்சனால் எடுக்க முடியவில்லை. பத்து பந்துகள் பிடித்த போதும் வாட்சனிடம் இருந்து ரன் வரவில்லை. இந்த அழுத்தம் காரணமாக, டூப்ளெசிஸ் அவுட் ஆக சென்னை ரசிகர்களே வாட்சனை திட்ட ஆரம்பித்தார்கள். இது ஒன்றும் டே-நைட் டெஸ்ட் போட்டி அல்ல என்றெல்லாம் ட்வீட்டுகள் பறந்தன. ஆனால் வாட்சனோ ‘பாத்துக்கலாம்’ என விக்ரம் கமல் மாதிரி ஜாலியாக இருந்தார். காரணம் அடுத்த வரப்போகும் சுனாமியில் ஐதராபாத் சிக்கப் போகும் நம்பிக்கையில் தான்.
ஐந்து ஓவர்களில் சென்னை 20 ரன்கள்தான் எடுத்திருந்தது. அதில் புவனேஷ்வர் குமார் மூன்று ஓவர்கள் வீசியிருந்தார். சென்னை இப்படி ஆடுகிறதே என்று அங்கலாய்க்கும் போது ஆறாவது ஓவரில் பளார் என ஒரு சிக்சர் மிட் விக்கெட் திசையில் விழுந்தது. தூங்கிக் கொண்டிருந்த சென்னை ரசிகர்களுக்கு வாட்சன் அடித்த அலாரம் அது. அதன் பிறகு நடந்தது எல்லாம் வெறித்தனம்… ராம்பேஜ் என்று இன்னும் எத்தனையோ வார்த்தைகளைப் போட்டு வேண்டுமானாலும் வர்ணிக்கலாம். ரஷித் கான் மற்றும் புவனேஸ்வர் குமார் இருவருக்கு மட்டும் தான் அன்று வாட்சனிடம் இருந்து மரியாதை வந்தது. மற்றபடி சந்தீப், பிராத்வைட், சித்தார்த் கவுல், சகிப் என எல்லாருடைய பந்துவீச்சும் பஞ்சு பஞ்சாக பறந்தன. ஒரு ரன் அடிக்கவே பத்து பந்துகள் எடுத்த வாட்சன் 51 பந்துகளில் சதம் கடந்தார். டெஸ்ட் மேட்ச் அப்படி இப்படி என வந்த எல்லா விமர்சனத்துக்கும் பதிலடி தரும் வண்ணமாக 19வது ஓவரிலேயே ஆட்டத்தை வென்று முடித்தது சென்னை. சதம் கடந்த வாட்சன் ஆட்டநாயகன் ஆனார்.
மொத்த சென்னை அணியும் வெற்றியைக் கொண்டாடும் போது தோனி மட்டும் அழகாக கண்ணான கண்ணே என தனது மகளிடம் விளையாடிக் கொண்டிருந்தார். Dad’s Army என விமர்சித்தவர்கள் எல்லாரும் பார்க்கும் படியாக மைதானத்தில் தங்கள் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். தோனி மீது டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுகிறார், வயதாகி விட்டது அது இது என விமர்சித்திருந்தாலும், இத்தொடரில் 400 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார் அவர். சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் அதன் சீற்றம் குறைவதில்லை தானே.