"இங்க ஒரே ஒரு காமெடியனை வச்சு, மொத்த படத்தையும் முடிச்சிடுறாங்க!" – மனம் திறக்கும் வித்யுலேகா

“உடம்பு குண்டாக்குறதும், அதை ஒல்லியாக்குறதும் எனக்கு ரொம்ப ஈஸி. ஆனா, உடல் எடையை ஒரே எடையா பராமரிக்கறதுதான் ரொம்ப சிரமம். என் கல்யாணத்துக்குப் பிறகு, கொஞ்சம் பூரிப்பானேன். இப்ப `குக் வித் கோமாளி’க்கு பிறகு நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு வெயிட் ஆகிட்டு இருக்கேன்!” – முகம் மலர்ந்து புன்னகைக்கிறார் வித்யுலேகா. நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் அசத்தி வந்தவர். இப்போது விஜய் டி.வியின் ‘குக் வித் கோமாளி’யில் கலகலக்கிறார்.

எப்படி இருக்கு சின்னத்திரை அனுபவம்..?

வித்யுலேகா

”ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் சினிமாவுக்கு வந்து 10 வருஷம் ஆகுது. இதுவரை 75 படங்கள் பண்ணியிருப்பேன். தமிழ் சினிமாவுல என்னை பார்த்த ஆடியன்ஸ் எல்லாருக்கும் என்னை ஒரு குண்டுப் பொண்ணாத்தான் தெரியும். இல்ல.. ‘இவங்க சந்தானம் கூட நடிச்சிருப்பாங்க.. அந்த படத்துல நடிச்சிருப்பாங்க. இந்தப் படத்துல நடிச்சிருப்பாங்க’னு தான் சொல்லியிருக்காங்க. என்னை எல்லாருக்கும் அடையாளம் தெரிஞ்சிருந்தாலும் என் பெயர் நிறைய ஆடியன்ஸுக்கு தெரிஞ்சிருக்காது. பத்து வருஷத்துக்கு அப்புறம் இப்பத்தான் செலிபிரிட்டி மொமன்ட் அமைஞ்சிருக்கு. அதுக்கு காரணம், ‘குக் வித் கோமாளி’. அது தந்த ரீச், இவ்வளவு படங்கள் எனக்குத் தரல. இதுக்கு முன்னாடி ‘சீஸன்2’லேயே எனக்கு அப்ப வாய்ப்பு கிடைச்சது. அந்த டைம்ல தெலுங்கில் நிறைய படங்கள் கைவசம் இருந்துச்சு. என்னால பண்ணமுடியல. அதனால ‘சீஸன்3’ பண்றேன்னு சொன்னேன். இப்ப பண்ணிட்டிருக்கேன். இதோட ரீச் வேற லெவல்ல இருக்கு. நான் வைரலாகுறேன். என் போட்டோஸ் வச்சு மீம்ஸ் வருது.. சந்தோஷமா இருக்கு எல்லாரும் என் பெயர் சொல்லி கூப்பிடுறது மிகப்பெரிய வெற்றியா பாக்குறேன். எனக்கு அங்கே டைட்டில் கிடைக்குதோ இல்லையோ ஆனா, ஆடியன்ஸ்கிட்ட என் பெயரைக் கொண்டு போய் சேர்த்திருக்காங்க… அதுவே மிகப்பெரிய வெற்றி. ”

தெலுங்கு சினிமாவிலதான் கவனம் செலுத்துறீங்க… தமிழ்லையும் காமெடி நடிகைகளுக்கான இடம் காலியாத்தானே இருக்கு?

“நானும் பலவருஷமா அந்த காலியிடத்தை நிரப்ப முயற்சி பண்ணிட்டுத்தான் இருக்கேன். எனக்குத் தெரிஞ்சு, பெண் காமெடியன்ஸுக்கும் முக்கியத்துவம் இருக்கற கதைகள் இயக்குநர்கள் எழுதணும். ஏன்னா, நான் பார்க்கற சினிமாவுல காமெடி நடிகைகளுக்கு அவங்களுக்கான ஸ்கோப்பே இல்லை. ஒரேயொரு காமெடி நடிகர் மட்டும் போதும்னு நினைச்சிடுறாங்க. அப்படியே காமெடி நடிகை இருந்தா, அவங்களுக்கு முக்கியத்துவமான ரோல் இல்ல. காமெடி நடிகைகளுக்கு சினிமாதான் வாய்ப்புகளை உருவாக்கணும். ஆடியன்ஸ் எங்களை ஏத்துக்க ரெடியா இருக்காங்க. இன்னிக்கு. ‘தமிழ்ல ஏன் லேடி காமெடியனா பண்ண மாட்டேங்குறீங்க?’னு கேட்டிருக்காங்க. வாய்ப்பு தந்தால்தானே பண்ணமுடியும்.
ஆனா, தெலுங்கில் நல்லா என்கரேஜ் பண்றாங்க.

வித்யுலேகா மோகன்ராம்

ஒரு படத்துல காமெடியன்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் இருக்காங்களோ அவ்வளவுக்கு காமெடி ஒர்க் அவுட் ஆகும்னு நினைக்கறாங்க. ஆனா, இங்கே ஒரே ஒரு காமெடியனை வச்சு, மொத்த படத்தையும் முடிச்சிடுறாங்க. ஆச்சி மனோரமா, கோவை சரளா மேம் எல்லாம் ஒரு காலத்துல சிறப்பான கதாபாத்திரங்கள் பண்ணினாங்க. அவங்களுக்காக யோசிச்சு எழுதினாங்க. அப்படி எங்களுக்கும் எழுதணும்னு விரும்புறேன். நான் நடிக்க வரும்போது மனோரமா ஆச்சி, கோவை சரளா மேம் மாதிரி ஆகணும்னுதான் வந்தேன். சந்தானத்தோட தொடர்ந்து காமெடியா நடிக்கும்போது நான் நினைச்சது நடக்குதுனு நினைச்சேன். அதன்பிறகு வாய்ப்புகள் வரல. என் முதல் படம் ‘நீதானே என் பொன்வசந்தம்’ல இருந்து இப்ப வரை எல்லாமே என்னை தேடி வந்த சான்ஸ்கள்லதான் பயன்படுத்திருக்கேன். பெரிய ஸ்டார். சின்ன ஹீரோ, சின்ன ரோல் இப்படி எந்த வித்தியாசமும் நான் பார்த்ததில்ல. என்னைத்தேடி ஒரு வாய்ப்பு வந்தால், அந்தப் படத்துல நான் இருப்பேன்.

ஏன்னா ஒரு வாய்ப்புனா வாய்ப்புதான். நடிக்க சான்ஸ் எதிர்பார்த்து எத்தனையோ பேர் காத்திருக்காங்க. இதுல என்னைத் தேடி வந்த வாய்ப்பை உதற எப்படி மனசு வரும்? எங்க அப்பா (நடிகர் மோகன் ராமன்) ஒரு அட்வைஸ் சொன்னாங்க. ‘உனக்கு வருஷத்துக்கு பத்து படங்கள் வந்ததுனா அதுல மூணு படம் உன் passionnனுக்காக பண்ணு… நாலுப் படங்கள் அந்த தேடி வந்த வாய்ப்புக்காக பண்ணு… மீதமிருக்கற படங்கள் சம்பளத்துக்காக பண்ணு’ இதான் என் கொள்கை. இப்படி இருந்தா கையில காசும் வரும். Passion- னும் நிறைவேறும். இதுவரைக்கும் 75 படங்கள் பண்ணிட்டேன்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.