திருப்பதி:
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி பெரிய மாசி வீதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனம் திறக்கப்பட்டது.
இந்த நிதி நிறுவனத்தில் காளஹஸ்தியை சேர்ந்த சவந்தி (வயது 36) என்பவர் கேஷியரியராக வேலை செய்து வருகிறார்.
நேற்று நிதி நிறுவனம் வழக்கம் போல் இயங்கியது. மாலை பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்த ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். சவந்தி மட்டும் இரவு 10 மணி அளவில் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார்.
அப்போது 3 வாலிபர்கள் திடீரென நிதி நிறுவனத்திற்குள் நுழைந்தனர். அங்கு வேலை செய்து கொண்டு இருந்த சவந்தியை கத்தி முனையில் மிரட்டி அவரது வாயில் துணியை அடைத்து சேரில் கட்டிப் போட்டனர். பின்னர் அவரிடம் இருந்த லாக்கர் சாவியை மிரட்டி பிடுங்கினர்.
லாக்கரில் இருந்த ரூ. 85 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கப் பணம், சி.சி.டி.வி. கேமராவில் பதிவான ஆட்டிஸ்க் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இரவு நீண்ட நேரம் பைனான்ஸ் கம்பெனியில் விளக்குகள் எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் நிறுவனத்திற்குள் சென்று பார்த்தனர்.
அப்போது சவந்தி வாயில் துணியை அடைத்து சேரில் கட்டப்பட்ட நிறையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காளஹஸ்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. விஸ்வநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சவந்தியிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.