புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022’ என்ற பெயரில் நாட்டின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழா மே 27 மற்றும் 28 தேதிகளில் (இன்றும் நாளையும்) டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் விவசாயிகளுக்கு உதவும் ட்ரோன் பைலட்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். மேலும் ட்ரோன்கள் பற்றிய செயல் விளக்கங்களையும் அவர் பார்வையிட உள்ளார். இத்துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவன அதிகாரிகளுடனும் பிரதமர் கலந்துரையாட உள்ளார்.
இவ்விழாவில் அரசு உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், ராணுவ வீரர்கள், மத்திய ஆயுதப்படை போலீஸ் படையினர், பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவன அதிகாரிகள் என சுமார் 1,600 பேர் பங்கேற்க உள்ளனர். 70-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதில் ட்ரோன்களின் பல்வேறு பயன்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.