ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் கடற்பாசி சேகரிக்கும் தொழில் செய்துவந்தார். இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி கடற்பாசி சேகரிக்கச் சென்ற மீனா, கடற்கரையோர காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். மீனாவை அந்தப் பகுதியில் இருக்கும் இறால் பண்ணையில் வேலைப் பார்க்கும் வடமாநில இளைஞர்கள் ஆறுபேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைசெய்து கொலை செய்துவிட்டதாகக் கூறி கிராம மக்கள் வடமாநில இளைஞர்கள் ஆறுபேரை சரமாரியாகத் தாக்கினர். அதையடுத்து, போலீஸார் அவர்களை கிராம மக்களிடமிருந்து மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த நிலையில், இறந்த மீனாவின் கணவர் போலீஸில் அளித்தப் புகாரின்பேரில், எஸ்.பி கார்த்திக் தலைமையிலான போலீஸார் ஆறு வடமாநில இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் இரண்டு பேர் மீனாவை நகைக்காகக் கொலைசெய்ததாக தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ், ரஞ்சன் ராணா ஆகியோரைக் கைதுசெய்து மண்டபம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் மீனாவிடமிருந்து திருடிய நகைகளை ரமேஸ்வரத்தில் உள்ள அடகு கடை ஒன்றில் விற்பனை செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள அடகு கடைகளில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதுசெய்யப்பட்டிருக்கும் இருவர் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், பாலியல் வன்கொடுமை செய்தார்களா என்பது விசாரணை, மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தெரியவரும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்தச் சம்பவத்தில் மற்ற நான்கு வடமாநில இளைஞர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.