சென்னை: “பிரதமரிடம் சிறுபிள்ளை போல் பேசாமல், சரியான முறையில் பேசுங்கள். அவ்வாறு பேசினால், நீங்கள் கேட்காமல் தமிழகத்திற்கு வரவேண்டிய வேலைகளை பாஜக செய்யும்” என்று முதல்வர் ஸ்டாலின் உரை தமிழக பாஜக அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும், அனைத்து இடங்களிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு பிரதமரை மனம் நெகிழச் செய்தது. நேற்று இங்கிருந்து டெல்லி திரும்புவதற்கு முன்பு, நமது கட்சித் தலைவர்களிடம், தமிழகத்தில் இதுபோன்ற உணர்ச்சிகரமான ஒரு வரவேற்பை பார்த்து நான் மனம் நெகிழ்ந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். வரவேற்பு அளித்த மக்களுக்கும், பாஜக சொந்தங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும்கூட பேசினார். அதில் பாரத பிரதமரின் பேச்சு எப்படி இருந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும். தமிழ் கலாசாரத்தை தனது தோளில் தூக்கி, இந்த மண்ணின் மீது எவ்வளவு மரியாதை இருக்கிறது, இந்த மண்ணை எப்படி நேசிக்கிறேன் என்று பிரதமர் பேசும்போது, ஒவ்வொரு வார்த்தையிலுமே தெரிந்தது. அது எல்லாவற்றையும் தாண்டி 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் 11 திட்டங்களை அர்ப்பணித்துவிட்டு சென்றிருக்கிறார். இலங்கைக்காக செய்திருக்கிற உதவிகள் குறித்தும் பேசியிருந்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு, ஒரு திமுக தலைவர் அரசியல் மேடையில் நின்றுகொண்டு தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு பேசிய பேச்சைப் போல இருந்தது. பாஜகவின் கடமை, முதல்வர் பேசிய ஒவ்வொரு வரிக்கும்கூட, அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும்கூட இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளிக்க வேண்டியது எங்களது கடமையாக இருக்கிறது.
முதல்வரின் பேச்சின்போது, தமிழக வளர்ச்சியானது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல சமூக நீதி சிந்தனையும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்று குறிப்பிட்டார். அவர் மேடையில் என்ன சொல்லியிருக்க வேண்டுமென்றால், தன்னுடைய அமைச்சர் ராஜகண்ணப்பன் ஓர் அதிகாரியை சாதிப் பெயர் வைத்து திட்டியதற்காக அவருக்கு கிடைத்த பரிசு என்பது துறை மாற்றம் மட்டும்தானே தவிர வேறெதுவும் இல்லை. அதேபோல, அவரது உறவினர்கள், எம்பிக்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர், நான் என்ன தீண்டத்தகாதவனா என்று ஒரு வார்த்தையை கேட்டனர். அதைப்பற்றியும் தமிழக முதல்வர் மேடையில் பாரத பிரதமர் முன்பு சமூகநீதியை குறித்து பேசியிருக்க வேண்டும்.
நான் குறிப்பிடும் சம்பவங்கள் எல்லாம் கடந்த ஓராண்டில் நடந்தது. இன்னும் பழைய வரலாற்றையெல்லாம் எடுத்துப் பார்க்க ஆரம்பித்தால் இன்னும் நிறைய விஷயங்கள் தெரியும். இந்த நிலையை வைத்துக்கொண்டு இவர்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது, சமூக நீதி ஒன்றிணைந்த வளர்ச்சி என்று முதல்வர் பேசியிருப்பது எள்ளி நகையாட வேண்டிய விஷயம்.
தமிழக வளர்ச்சி பற்றி முதல்வர் பேசினார். தமிழகத்தின் வளர்ச்சி என்பது நம்முடைய வளர்ச்சி மட்டுமா? இந்த வளர்ச்சிக்காக வேறு யாரும் வேலை செய்யவில்லையா? யாரும் உறுதுணையாக இல்லையா? தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழ் மொழி பேசாதவர்கள் 25 லட்சம் பேர் உள்ளனர். திருப்பூர், ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் 25 லட்சம் தமிழ் மொழி சாராத தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே வாக்குரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தியர் என்ற அடிப்படையில் இங்கிருக்கக் கூடிய தமிழ் மக்களுக்காக வேலை செய்துகொண்டுள்ளனர். எனவே இந்த பிரிவினைவாதப் பேச்சை விட்டுவிட்டு, முதல்வர் பேசும்போது வரலாறு என்ன இருக்கிறதோ, அதை மட்டும் பேச வேண்டும்.
அண்மையில் தமிழகத்திற்து 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒரு ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை வந்தது. மத்திய அரசு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், முதல்வர் இதுவரை கேரளாவைச் சேர்ந்த கிட்டெக்ஸ் (Kitex) என்ற ஒரே ஒரு நிறுவனத்துடன் மட்டுமே பேசி கொண்டிருக்கிறார்.
2021-ம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு என்று 13 இடத்தில் குறிப்பிட்டுள்ளனர். நேற்று முதல்வர், தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு என்று தான் எழுதியதை மறந்துவிட்டு, மேடையில் ஒன்றிய அரசு என்று 11 முறை குறிப்பிட்டிருக்கிறார். எதனால் முதல்வருக்கு இந்தக் குழப்பம்?
நீட் பொம்மையை வைத்து நாடகமாடுகின்றனர். பிரதமர் உங்களைப் போல நிறைய பேரை பார்த்துவிட்டு வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அரசியல் என்பது கும்மிடிப்பூண்டியிலிருந்து கோபாலபுரம் வரையிலானது. மோடியின் அரசியல் என்பது இந்திய அரசியலை தாண்டி உலக அரசியலுக்கு சென்றுவிட்டார். எனவே, பிரதமரிடம் சிறுபிள்ளை போல் பேசாமல் சரியான முறையில் பேசுங்கள். அவ்வாறு பேசினால், நீங்கள் கேட்காமல் தமிழகத்திற்கு வரவேண்டிய வேலைகளை பாஜக செய்யும். எனவே முதல்வர் இதுபோன்ற நாடகங்களை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான அரசியலை கையிலெடுத்து அடுத்த 4 ஆண்டு காலம் வழிநடத்துவார் என்று நான் நம்புகிறேன்.
திராவிட மாடல் வளர்ச்சி என்று நீங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள். ஒவ்வொரு துறை வாரியாக புத்தகம் வெளியிடப் போகிறோம், ஒவ்வொரு துறையாக, ஒவ்வொரு அமைச்சராக இன்னும் 15 நாட்களில் ஊழல் பட்டியல் வரும். புத்தகத்தை வெளியிடுவோம். தமிழக மக்களுக்கு தெரியும், இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியவேண்டும். முதல்வர் யாரு, நம்பர் 1 முதல்வர் என்றால், ஊழலில் நம்பர் 1 முதல்வர் என்பதால் சொல்கின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் இதே இடத்தில் பேப்பர் ரிலீஸ் செய்வோம். இதன் மூலம் இரண்டு அமைச்சர்கள் பதவி விலகல் இருக்கும். பதவி விலகியே ஆகவேண்டும்” என்று அவர் கூறினார்.