விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளில் ஏப்ரல் 28-ம் தேதி படம் வெளியாகியது. ஒரு மாதத்திற்கு பிறகு இன்றைக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவான படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. படத்தை விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘ரவுடி பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. திரையரங்க விநியோகத்தை ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மேற்கொண்டது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, வெளிநாடு என ஒட்டுமொத்தமாக படத்தின் திரையரங்க வசூல் தொகை 66 கோடி ரூபாய். இதைப் படக்குழுவே அதிகாரபூர்வமாக போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவித்திருக்கிறது.
டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு 24 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. ஆடியோ உரிமை 4 கோடிக்கு சோனி மியூசிக் நிறுவனத்துக்கும், ஹிந்தி சாட்டிலைட் உரிமை 6 கோடிக்கு கோல்ட் மைன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக படத்தின் வசூல் 100 கோடியைத் தொட்டிருக்கிறது.
விக்னேஷ் சிவன் அடுத்து அஜித்தின் படத்தை இயக்கவுள்ளார் என்பது அறிந்ததே! படத்தின் கதையை அஜித் இன்னும் முழுமையாகக் கேட்கவில்லை. ஒன்லைன் மட்டும் சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். அவரின் திருமணத்திற்குப் பிறகுதான் அஜித் படத்திற்கான பணிகள் தொடங்க இருக்கின்றன. அடுத்த வருடம் ஜனவரி மாதம், இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.