ராமநாதபுரம்: அதிமுகவைச் சேர்ந்த ஆர்.தர்மர் முதுகுளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் கடிதம் அளித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் வேட்பாளர்களாக முன்னாள் அமைச்சரும், அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் அதிமுக ஒன்றியச் செயலாளரும், முதுகுளத்தூர் ஒன்றியக்குழு தலைவருமான ஆர்.தர்மர் ஆகியோரை, கடந்த 25-ம் தேதி இரவு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆர்.தர்மர் சென்னை சென்று, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசனை சந்தித்து, தனது ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார்.
ஆட்சியர் சங்கர் லால் குமாவத், பரமக்குடி அருகே ஆய்வுப் பணியில் இருந்ததால் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
பின்னர் அவர் கூறும்போது, “முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவைப் போல் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கட்சியை வழிநடத்திச் செல்கின்றனர். ஜெயலலிதா இருந்தபொழுது எப்படி அடிமட்டத் தொண்டருக்கும் கட்சிப் பதவி, அரசு பதவிகள் கிடைக்குமோ, அதேபோன்று எனக்கு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளனர். திடீரென என்னை வேட்பாளராக அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் அவர்கள் இருவரின் அனுமதியுடன் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வேன்” என்றார்.