கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டின் விளைவு, பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றும் நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் முன்னுரிமை வழங்கப்படவேண்டியவைகள் மற்றும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்று (27) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
நீண்ட காலமாக நாடு எதிர்நோக்கும் முக்கிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வரைவு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த சில வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய கல்வி ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தேசிய கல்விக் கொள்கை வரைவு நிறைவடைந்துள்ளது…
- பாதிப்படைந்துள்ள கல்வி மற்றும் பரீட்சை நடவடிக்கைகள் குறுகிய காலத்தில் மீளமைப்பு.
நடைபெறும் க.பொ.த சாதாரண தரம் , எதிர்வரும் க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் மற்றும் நிறைவுசெய்யப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் பகுதிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடாத்துவதில் பல துறைகளில் கிடைத்த ஒத்துழைப்புகளை கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர். தற்போதுள்ள தடைகளுக்கு மத்தியிலும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக பலர் செயற்பட்ட விதம், சமூகத்திற்கு நல்ல முன்னுதாரணமாக அமைந்துள்ளது என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
தேசிய கல்வி சீர்திருத்த செயல்முறை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. பாடசாலையை விட்டு வெளியேறும் பிள்ளைகள் காலத்தை வீணடிக்காமல் எதிர்காலத்திற்கான பாதையை மிகச்சரியாக வழிகாட்டும் வகையில் சீர்திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இங்கு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந் தெரிவித்தார்.
புத்தகத்தின் உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்கும் முறைமைக்கு மட்டுப்படுத்தப்படாமல் மாணவர்களின் திறன் மற்றும் திறமைகளை உள்வாங்கும் வேலைத்திட்டத்தை கல்வி மறுசீரமைப்பு மூலம் வழங்குவதற்குத் தயார் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட பாடப்பிரிவு எதுவாக இருந்தாலும் அனைத்து மாணவர்களும் தகவல் தொழில்நுட்பத்தை கற்கக்கூடிய வகையில் பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
பாடசாலை அபிவிருத்தி, சீருடைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
27.05.2022