மதுரை: மதுரை மாநகராட்சியில் பெரும்பான்மை திமுக கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் அரசியலுக்கு புதியவரான மேயர் இந்திராணி தனித்துவிடப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி கவுன்சிலர்களையும், சொந்த கட்சி கவன்சிலர்களையும் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.
மதுரை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த இந்திராணி பொறுப்பேற்ற நாள் முதல் அவருக்கும், அக்கட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே திரைமறைவு மோதல் நீடித்து வருகிறது. மேயராக இந்திராணி பொறுப்பேற்றபோது திமுக கவுன்சிலர்கள் பலர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்திராணிக்கு, மேயராவதற்கு முன் எந்த அரசியல் அனுபவமும் கிடையாது. அவரது கணவர் பொன்வசந்த் திமுகவில் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளராக இருப்பதால் திடீரென்று இந்திராணி மேயராக்கப்பட்டார். இது மேயர் கனவுடன் உலா வந்த பல திமுக கவுன்சிலர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை அவர் தட்டிப்பறித்ததாக சில முக்கிய திமுக கவுன்சிலர்களும், அவர்கள் குடும்பத்தினரும் இன்னும் அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறார்கள்.
மேலும், மாநகர மாவட்டச் செயலாளர்கள், மூத்த திமுக கவுன்சிலர்கள் பலர், மாநகர திமுகவில் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாராஜனுடன் முரண்பட்டவர்கள். அதனால், இயல்பாகவே பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளரான மேயர் இந்திராணியை அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால், ஒரு சில திமுக கவுன்சிலர்கள் தவிர மற்ற அனைவரும் எதிர்க்கட்சி கவுன்சிலர்களுடன் ரகசிய கூட்டணி வைத்து மேயருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மாநகராட்சி கூட்டங்களில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் நெருக்கடி கொடுக்கும்போது மேயருக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர்கள் நிற்காமல் அதனை ரசிக்கிறார்கள். கடைசி கூட்டத்திற்கு முந்தைய பட்ஜெட் தாக்கல் மாநகராட்சி கூட்டத்தில் இருக்கைகள் சரியாக ஒதுக்கவில்லை என்று ஆவேசமடைந்த அதிமுக கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர்கள் இருக்கைகளை கைப்பற்றி அதில் அமர்ந்தனர். அதற்கு திமுக கவுன்சிலர்கள், எங்கள் இருக்கைகளை விட்டு எழுந்திரீங்க, வேண்டுமென்றால் மேயரோடு இருக்கையில் போய் அமருங்கள், நாங்கள் என்ன கேட்கவாக போகிறோம்,” என்றனர்.
கடைசியாக நடந்த மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டத்தில் கூட திமுக கவுன்சிலர்கள் பலர் எழுந்து நின்று எதிர்கட்சி கவுன்சிலர்கள் போல் தங்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று மேயருக்கு எதிராக கோஷமிட்டனர். மேயர் இருக்கைவிட்டு எழுந்து தனது அறைக்கு செல்ல முயன்றபோது திமுக கவுன்சிலர்கள் அவரை, ”மேடம் பதில் சொல்லிவிட்டு போங்கள்,” என்று நெருக்கடி கொடுத்தனர். அதுபோல், நேற்று முன்தினம் திருப்பரங்குன்றத்தில் நலவாழ்வு மையம் பூமிபூஜை விழாவில் பங்கேற்க சென்ற மேயரை காரோடு அங்குள்ள திமுக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களே சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுவாக ஆளும்கட்சி மேயர் கார் சிறைபிடிக்கப்படுவது சாதாரணமாக நடக்காது. ஆனால், மதுரையில் ஆளும்கட்சி மேயரான இந்திராணி காரே சிறைப்பிடிக்கப்பட்ட பின்னணியிலும் திமுகவினர் சிலர் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனால், மேயர் இந்திராணி தரப்பினர் கடும் மனநெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாநகராட்சி கூட்டங்கள் முதல், நிர்வாக நடவடிக்கைகளிலும் திமுக கவுன்சிலர்களே மேயருக்கு ஒத்துழைக்காததால் அவரால் திமுக, அதிமுக மற்றும் மற்ற கட்சி கவுன்சிலர்களை ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ள முடியவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மேயரின் ஆதரவு அமைச்சரான பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனும் முயற்சி எடுக்கவில்லை.
அவர் நிதியமைச்சராக இருப்பதால் மாநில அளவில் அரசியல் செய்து வருவதால் உள்ளூர் அரசியல் பிரச்சனைகளில் அவருக்கு தலையிட நேரமில்லை. அவர் அமைச்சராவதற்கு முன்பே கூட தொகுதி நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோடு நின்று கொள்வார். பெரிதாக உள்கட்சி பிரச்சனைகளில் தலையிட மாட்டார். அதனால், மேயர் தரப்பினர் திமுக கவுன்சிலர்களால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைச்சரிடம் நேரடியாக தெரிவிக்க முடியவில்லை. மேலும், சமீபத்தில் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் கணவரால் ஏற்பட்ட சர்ச்சையால் அவரால் நேரடியாக மேயருக்கு மாநகராட்சி நிர்வாக நடவடிக்கைகளில் உதவ முடியவில்லை. அதனால், தனி நபராக தனித்துவிடப்பட்ட நிலையில் மேயர் இந்திராணி சொந்த கட்சி கவுன்சிலர்களையும், எதிர்கட்சி கவுன்சிலர்களையும் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.