சேத்துமான் திரைவிமர்சனம்: உள்ளிருந்து உடற்றும் பசி

அழகிய பெரியவன், எழுத்தாளர்

தமிழ் இயக்கத்தில், பா. இரஞ்சித் தயாரிப்பில் சோனி திரைத்தளத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படமான சேத்துமான் தமிழ்ச் சினிமாவின் முக்கிய திரைப்படங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனுடைய வறுகறி, மாப்பு கொடுக்கணும் சாமி ஆகிய சிறுகதைகளில் இருந்து இப்படத்துக்கான திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்துக்கு பெருமாள் முருகனே சிறப்பான உரையாடல்களையும் எழுதியுள்ளார்.

ஓர் எளியக் கதைக்கரு. அதையொட்டி உருவாகியிருக்கும் இயல்பான திரைப்படம் சேத்துமான். எழுத்தில் இருக்கிற தன்மைகளை அதிக அளவுக்கு எடுத்துக் கொண்ட காட்சி வழி நாவலாக உருமாறி இருக்கிறது இத்திரைப்படம். தமிழில் முதன்முதலாய் அழுத்தமாகக் கால்பதித்திருக்கும் இயக்குநர் தமிழ் இந்தப் படத்தில் மொழி வழியிலான பிரதிக்கும் பிம்பங்கள் வழியிலான பிரதிக்கும் நடுவில் தமிழ்த் திரையுலகில் இருந்துவருகிற கனமான கோட்டை அழித்து, மெல்லிய இழையாக மாற்றியிருக்கிறார்.

இயல்புவாத பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் முடிகிறபோது அழுத்தமானதொரு கதையை வாசித்த உணர்வும், அதையே காட்சி வடிவமாகப் பார்த்த அழுத்தமும் மனதில் கப்பி பேச்சற்ற நிலைக்கு நம்மைக் கொண்டு சென்று விடுகிறது.

பசி

உலகில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் வருகிற பசியைத்தான் பேசுகிறது படம். ஆனால், கிடைப்பதைத் தின்று பசியாற்றிக் கொள்ளும் எளியவரின் பசியல்ல இது. வகை வகையாகவும், வக்கணையாகவும், என்ன தின்னலாம் என்று அலைகிற வலியவரின் பசி. சாதி பேதம், மத பேதம், பால் பேதம் போன்று இது பசி பேதம்! மனிதர்கள் உயிர்வாழவேண்டும் என்கிற தம்பசியை நிவர்த்தி செய்து கொள்ளவே உயிர் வாழ்கின்றனர். அதற்காகவே எல்லாவற்றையும் செய்கின்றனர்.

பசியை அதிகாரப்பசி, ஆஸ்திப்பசி, அந்தஸ்துப்பசி, வயிற்றுப்பசி, உடற்பசி என்று பலவாறாகக் கருதிக் கொள்ளலாம். இந்தப் ’பசி’க்களை தீர்த்துக் கொள்வதற்கு எல்லோராலும் முடிவதில்லை. கொஞ்சம் பேருடைய பசியைத் தீர்ப்பதற்காக, உலகில் அனேக மக்கள் உழைக்கின்றனர். உழைத்துக் கொண்டே இருக்கின்றனர்.

பிறருக்காக தம்முடைய விருப்பங்களையும் லட்சியங்களையும் ஆசைகளையும் கைவிட்டு விடுகின்றனர். வாழ்க்கையைத் தியாகம் செய்கின்றனர். பிறர் பசியைத் தீர்ப்பதற்காக தம்உயிரையே கொடுத்து விடுகின்றனர். இது தன்னியக்கமாக நடைபெறுவதில்லை. அதிகாரத்தினாலும் ஆதிக்கத்தினாலும் நடைபெறுகிறது.

இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகம். இந்தப் பேருண்மையை ஓர் எளிய கதையின் வழியாக இத்திரைப்படம் நமக்குள் வெகு ஆழமாகக் கடத்திவிடுகிறது.

பசியின் கதை

இந்தியாவில் மதத்தோடும், சமூகப் பிரிவுகளோடும் முடிச்சு போடப்பட்டிருக்கும் உணவு அரசியலை படம் அப்பட்டமாக வெளிக்கொண்டு வருகிறது. பண்ணையில் உழைத்திடும் உழைப்பாளி பூச்சி. பூச்சியின் பேரன். பன்றி வளர்ப்பவர் (இது மிகச் சிறந்த பாத்திரம்). பண்ணையம் வைத்திருப்பவர் என்று ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கடுக்காகப் படிந்திருக்கிறது கதை.

இறந்த மாட்டின் தோலை உரிக்கக் கட்டாயப் படுத்தப்படும் பூச்சியின் மகனும் மருமகளும், பிறகு மாட்டுக்கறி சாப்பிடுவதற்காகவே மாட்டைத் திருடியதாய் குற்றம் சாட்டப்பட்டு ஆதிக்கச் சாதியினரால் கொல்லப் படுகிறார்கள். அந்தத் தாக்குதலின் போது நிறைசூலியாய் இருக்கும் பூச்சியின் மருமகள் சாவதற்கு முன் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்தக் குழந்தையை நன்றாகப் படிக்க வைத்து ஆளாக்கவேண்டும் என்பதே பூச்சியின் இலட்சியம். மூங்கில் கூடைப் பின்னும் அவர், தன் பேரனுக்காக மனதில் பின்னிக் கொண்டு இருக்கும் பெருங்கனவு அது.

பெரிய வீடு, கார், பண்ணை நிலம் என வாழ்ந்து கொண்டிருக்கிற ஆதிக்கம் மிக்க ஒருவருக்கு, சேத்துமான் என்று கொங்குப் பகுதிகளில் அழைக்கப்படும் பன்றிக் கறியைச் சாப்பிடுகிற ஆசை எழுகிறது. அந்த நபருக்கு அவருடைய பங்காளியோடு ஏற்கனவே நிலத்தகராறு ஒன்றும் இருந்து வருகிறது. அவர் மனைவி அந்த நிலத்தகராறில் தனது கணவன் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணுகிறாள். ஆனால் தனது கணவன் பன்றிக்கறி சாப்பிடுவதையோ அவள் விரும்புவதில்லை.

மனைவியின் சொல்லைக் கேட்காத அந்த நபர், தன் குடிநட்பு வட்டத்தில் இருக்கிறவர்களை பன்றிக்கறி சாப்பிடுவதற்காகச் சேர்த்துக்கொண்டு காரியத்தில் இறங்குகிறார். ஒரு கூறு (பங்கு) இவ்வளவு ரூபாய் என்று அவர்களிடம் நிர்ணயித்து பணம் வசூலித்துக் கொண்டு, சுமார் பத்து கூறுகள் வரக்கூடிய ஒரு பன்றியை விலைக்கு வாங்குகிறார். இப்படி எவரெவரோ பன்றிக்கறியைத் தின்ன விரும்பும் ஆசையின் நடுவிலே பூச்சி சிக்கிக் கொள்கிறார். பன்றியைக் கட்டிச் சுமந்து வந்து, கொன்றுச் சமைத்துத் தருவதோடு அவர்களின் ஆணவப் பசிக்கும் இரையாகி விடுகிறார். மிகவும் இலேசான தன்மையில் தொடங்கும் திரைப்படம் கனத்தத் தன்மையுடன் முடிகிறது.

படத்தில் கையாளப்பட்டிருக்கும் திரைப்பட உத்திகள் நுண்ணியதாக உள்ளன. ஒரு தருணத்தை சொல்லும்போது துண்டுக் காட்சிகள் இல்லாமல் தொடர் காட்சியாக படமாக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளரை கதைக் களத்திற்குள்ளேயே நின்றிருக்கும் ஒருவராக உணரச் செய்கிறது.

இடத்தேர்வும், பாத்திரத் தேர்வும் மிகச்சிறப்பாக உள்ளன. நடிப்புத் தொழில்முறை சாராத மனிதர்களையே பெரும்பாலும் நடிக்க வைத்திருப்பதால் அசலான மக்கள் சினிமாவாக உருவாகியிருக்கிறது. மய்யக் கதைக்கு இணையாக தனிக்குவளை முறை, ஏழை மக்கள் கல்வி பெறுவதற்கு நீடிக்கும் தடை, வழிபாட்டு முறைகள் என்று ஊடாகப் பின்னிப் பின்னி வந்திருக்கிற காட்சிகள் படத்திற்கு அழுத்தத்தைக் கூட்டுகின்றன.

சேத்துமானும் பிறபடங்களும்

இந்திய அளவில் பன்றியை மய்யப் படுத்தி சில திரைப்படங்கள் ஏற்கனவே வந்துள்ளன. நாகராஜ் மஞ்சுளேவின் ஃபன்றி, லிஜோ ஜோஸ் பெளிச்சேரியின் அங்கமலி டைரிஸ், அவிரா ரெபேக்காவின் பிக்மேன் போன்றவை. இப்பட்டியலில் இணையும் சேத்துமான் மிகவும் தனித்து நிற்கிறதாக நான் கருதுகிறேன். இதற்குக் காரணம் சேத்துமான் வழியாக இயக்குநர் தமிழ் மிகத்துல்லியமாகக் காட்டுகிற கொங்குப் பகுதி வாழ்வியல். அதோடு, உணவுக்கும் சாதியப் பொதுக்கருத்தியலுக்கும், படிநிலைப் படுத்தப்பட்டதாக மாற்றப்பட்டிருக்கும் தனிமனித விருப்பங்களுக்கும் இடையிலான உறவு.

கொழுத்த வெள்ளைப் பன்றியை வளமையின் குறியீடாகவும் (உண்டியல் சின்னம்), கடவுளின் அவதாரமாகவும் பார்க்கிற இச்சமூகம் தான், கருப்புப் பன்றியையும், அதை வளர்க்கும் மனிதரையும், அதன் இறைச்சியைத் தின்னும் ஆசையையும் இழிவாகப் பார்க்கிறது. அவ்விதம் பார்க்கப்படுகின்ற இழிமைப் பார்வையில் இருக்கும் இழிமையை துணிக்கைத் துணிக்கையாகக் கிழித்து வீசுகிறது சேத்துமான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.