வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை ஷாரூக் மகன் ஆர்யன் கான் நிரபராதி: தேசிய போதை பொருள் தடுப்பு துறை தகவல்

மும்பை: போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று, தேசிய போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கான் விடுதலை செய்யப்படுகிறார். மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை விருந்து நடப்பதாக வந்த தகவலின்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 2ம் தேதி திடீர் ரெய்டு நடத்தினர். இதில் ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 4 வாரங்கள் அவர் சிறையில் இருந்தார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தவிர அனைவரும் ஜாமீனில் விடுதலையாகினர். முதலில் இந்த வழக்கை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே விசாரணை நடத்தினார். ஆனால், அவர் ஷாரூக்கானை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், சாதிச்சான்றிதழை திருத்தி மோசடி செய்ததாகவும் அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டினார். தொடர் சர்ச்சைகளுக்கு பிறகு, இந்த வழக்கு டெல்லியில் இருந்து வந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த அதிகாரிகள், 6,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதில் ஆர்யன் கான் உள்பட 6 பேர் பெயர்கள் இடம்பெறவில்லை.  இதுதொடர்பாக தேசிய போதை பொருள் தடுப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ரகசிய தகவலை தொடர்ந்து தேசிய போதை பொருள் தடுத்து துறையின் மும்பை மண்டல அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இரவு மும்பை அருகே நடுக்கடலில் வைத்து சொகுசு கப்பலான கார்டிலியாவில் சோதனை செய்தனர். அப்போது நூபுர், மொஹாக் மற்றும் முன்மும் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அக்டோபர் மாதம் 3ம் தேதி கார்டிலியா கப்பலில் பயணிக்க காத்திருந்த நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான், அர்பாஸ், இஷ்மீத், விக்ரந்த், கோமிட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்திய அதிகாரிகள் மேலும் பலரை கைது செய்தனர். இதனால் மொத்தம் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. ஆர்யன் கான், மொஹாக் தவிர மற்றவர்கள் போதை பொருள் வைத்திருந்தனர், 26 நாட்கள் சிறையில் இருந்த ஆர்யன் கானும் வேறு சிலரும் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.முதலில் தேசிய போதைப்பொருள் தடுப்பு துறையின் மும்பை மண்டல அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி முதல் டெல்லியில் உள்ள தேசிய போதை பொருள் தடுப்பு துறையின் தலைமை அலுவலகத்தை சேர்ந்த சஞ்சய் குமார் சிங் தலைமையில் சிறப்பு அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 14 பேர் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் ஆர்யன் கான் உள்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு பத்திரிகை குறிப்பில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை தேசிய போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் வழக்கு விசாரணையை நடத்தி வரும் சிறப்பு நீதிமன்றத்தின் பதிவு அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர். குற்றப்பத்திரிகையில் ஆர்யன்கானின் பெயர் இடம் பெறவில்லை. இந்த குற்றப்பத்திரிகை குறித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி விரைவில் முடிவு எடுப்பார். குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கானின் பெயர் இடம்பெறாததால் அவர் நிரபராதி என்பது உறுதியாகி உள்ளது. விரைவில் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.