வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-கொரோனா தடுப்பூசி பதிவு மற்றும் சான்றிதழ்களை பராமரிக்கும், ‘கோவின்’ இணையதளத்தை, சர்வதேச தடுப்பூசி திட்டம் உட்பட, பல்வேறு தேசிய சுகாதார திட்டங்களுக்கும் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியதும், அதற்கான முன்பதிவு உள்ளிட்ட இதர தகவல்கள் பெறவும், தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்யவும், கோவின் இணையதளம் உருவாக்கப்பட்டது. இதன் வாயிலாக, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோர் குறித்த விபரங்கள், ‘டிஜிட்டல்’ வடிவில் பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில், கோவின் இணையதளத்தை வேறு பல சுகாதார திட்டங்களுக்கும் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து கோவின் தலைவரும், தேசிய சுகாதார ஆணைய தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது:கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு மட்டும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கோவின் இணையதளத்தை, சர்வதேச தடுப்பூசி திட்டத்துக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.சர்வதேச தடுப்பூசி திட்டத்தில் பயன்பெறுவோர் விபரங்கள் தற்போது ஆவணங்களாக பராமரிக்கப்படுகின்றன.
இதை கோவின் இணையதளத்துடன் இணைப்பதன் வாயிலாக, வேலை எளிதாவதுடன், நாட்டில் உள்ள அனைத்து தடுப்பூசி திட்டங்களும், ‘டிஜிட்டல்’ மயமாக்கப்படும். கர்ப்பிணி பெண்கள், பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி விபரங்களும், இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதற்கான சான்றிதழ்களை கோவின் தளத்தில் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இவை தவிர குடும்ப கட்டுப்பாடு, குழந்தை மற்றும் கர்ப்பிணிகளுக்கான சுகாதார திட்டங்களும் கோவின் உடன் இணைக்கப்பட உள்ளன. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, மற்ற தடுப்பூசி திட்டங்களையும் கோவின் உடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement