சென்னை:
நடப்பாண்டு கோடை காலத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது.
அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதன் காரணமாக அக்னி வெயிலின் உச்சம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே காணப்பட்டது.
அதன்படி அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4-ந்தேதி முதலே வெயில் வாட்டியது. எனினும் ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தது.
அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் ஆகிய காரணங்களால் தமிழகத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தது.
இதனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திர கோடை காலத்தில் முதல் 2 வாரங்களுக்கு வெப்பம் தணிந்தே காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
இதனால் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது சென்னையில் அதிகபட்சமாக கடந்த 23 மற்றும் 24ந்தேதிகளில் 104 டிகிரி வெப்பம் பதிவானது.
இதனால் அனல் காற்று வீசியதால் மக்கள் அவதியடைந்தனர். 24-ந்தேதி தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது.
சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று காலை 102.38 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 100.94 டிகிரியும் வெப்பம் பதிவாகி இருக்கிறது.
அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. எனினும் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.