பொறியியல் கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது – உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உறுதி

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக் கான கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 இணைப்புக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் பட்டயப் படிப்புகளுக்கு (டிப்ளமோ) 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. நடப்பாண்டு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணையை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் 2022-23 கல்வியாண்டு பாலிடெக்னிக் படிப்பில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும். ஜூலை 22-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும். நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 23 முதல் ஜூலை 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விரிவான கலந்தாய்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பின்னரே, பொறியியல் படிப்புக்கான சேர்க்கை தொடங்கும். இது தொடர்பாக தனியார் கல்லூரி நிர்வாகங்கள், கல்வியாளர்களுடன் ஆலோசித்து கால அட்டவணை வெளியிடப்படும். வரும் கல்வியாண்டிலும் பொறியியல் கலந்தாய்வு இணைய வழியிலேயே நடைபெறும்.

கடந்த 2010-ல் திமுக ஆட்சியின்போது தமிழ் வழியில் பொறியியல் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அவர்களுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, பிராந்திய மொழிகளில் தொழிற்படிப்புகள் என்பது புதிதல்ல. தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை, ஏற்கெனவே நம்மிடம் உள்ளவைதான். தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

அதற்கு மாற்றாகவே, தமிழ்நாடு கல்விக் கொள்கையை வடிவமைக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிகளை உருவாக்கும் வகையில் கல்விக் கொள்கை இருக்கும். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டிய அவசியமில்லை. தமிழகத்தில் பொறியியல் கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது. பழைய கட்டணமே அமலில் இருக்கும். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) பரிந்துரைகள் ஏற்கப்படாது. கலை, அறிவியல் படிப்புக்குக்கூட நுழைவுத் தேர்வு என்பதை ஏற்க முடியாது.

முதுநிலைப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை ஏற்க பல மத்திய பல்கலைக்கழகங்கள் மறுத்துவிட்டன. கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தால், எல்லாம் சரியாகும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 வாரங்களுக்குள் பட்டமளிப்பு விழா நடத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. தமிழகத்தின் நிலைப்பாடு, தேவைகள் பற்றி கூட்டாட்சி முறையில் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டன. எனவே, பாஜக குற்றச்சாட்டு தவறானது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.