நடுவானில் மாரடைப்பு உயிர் பிழைத்த பயணி| Dinamalar

புதுடில்லி : துபாய் சென்று கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் மாரடைப்பு ஏற்பட்ட பயணி, விமானக் குழுவினர் மற்றும் டாக்டர் பயணியால் காப்பாற்றப்பட்டார்.கேரள மாநிலம் கண்ணுாரில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்கு, ‘கோ – பர்ஸ்ட்’ நிறுவன விமானம் நேற்று புறப்பட்டது.நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதில் பயணித்த யூனுஸ் என்ற பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

அவர் நிலைகுலைந்து சுயநினைவை இழந்த நிலையில், அருகில் இருந்த பயணியர் உதவி கோரி அலறினர். விமானி மற்றும் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, யூனுசுக்கு முதலுதவி செய்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணித்த ஷபர் அஹமது என்ற டாக்டரும் விமான ஊழியர்களுடன் இணைந்து, யூனுசுக்கு தீவிர சிகிச்சை அளித்து, ஆக்ஸிஜன் சிலிண்டரை பொருத்தி சுவாசிக்க செய்தார்.சற்று நேரத்தில் யூனுசுக்கு சுயநினைவு திரும்பியது.

விமானம் குறித்த நேரத்தில் துபாயில் தரையிறங்கியதும் யூனுஸ் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.சக பயணி உயிரைக் காப்பாற்றிய டாக்டர் ஷபர் அஹமதுவுக்கும், உயிர் பிழைத்த யூனுசுக்கும் கோ- பர்ஸ்ட் விமான நிறுவனம் இலவச டிக்கெட் வழங்கியுள்ளது. இந்த டிக்கெட்டை பயன்படுத்தி வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானங்களில் இருவரும் குறிப்பிட்டகாலத்திற்குள் இலவசமாக பயணம் செய்யலாம்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.