கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான இரண்டு சரக்கு கப்பல்களை அரேபிய வளைகுடா பகுதியில் வைத்து ஈரானின் புரட்சிகர காவலர் படையினர் வெள்ளியன்று சிறைப்பிடித்துள்ளனர்.
உலக அரசியல் வரலாற்றில் 1979 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவுடனான நட்பு முறிவை ஈரான் சந்திததில் இருந்தே உலகின் மிகவும் பதற்றமான பகுதிகளில் ஒன்றாக எண்ணெய் நாடுகளின் வளைகுடா மாறியது.
கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரானுடனான அணுசக்தி ஓப்பந்தத்தில் இருந்து வெளியேறியதில் இருந்து இந்த பதற்றம் மேலும் அதிகரிக்க தொடங்கியது.
இந்தநிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை தொடர்ந்து ரஷ்யாவின் மீது அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை வித்ததன, அதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் கிரீஸ் கடற்பகுதிக்குள் வந்த ரஷ்ய கொடி தாங்கிய சரக்கு கப்பலை அமெரிக்கா சிறைப்பிடித்து அதில் இருந்த ஈரானின் கச்சா எண்ணெய்களையும் பறிமுதல் செய்தது.
அமெரிக்காவின் இந்த பறிமுதல் நடவடிக்கைகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த ஈரான், அமெரிக்கா சர்வதேச விதிமுறைகளை மீறி ஈரானின் கச்சா எண்ணெய்களை சிறைபிடித்து வைத்து இருப்பதாக தெரிவித்தது.
அத்துடன் அமெரிக்காவின் இந்த அராஜக நடவடிக்கைக்கு கிரீஸ் முக்கிய பங்குதாராக இருந்து இருப்பதாக கிரீஸையும் ஈரான் குற்றம்சாட்டியதோடு அதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கப்படும் எனவும் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில் வெள்ளிகிழமையன்று அரேபிய வளைகுடா பகுதியில் சென்று கொண்டு இருந்த கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான இரண்டு சரக்கு கப்பல்களை விமான ரோந்து நடவடிக்கையின் கீழ் ஈரானின் புரட்சிகர காவலர் படையினர் அதிரடியாக சிறைப்பிடித்துள்ளனர்.
இதுத் தொடர்பாக ஈரானின் புரட்சிகர காவலர் படையினரின் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், அரேபிய வளைகுடா பகுதியின் விதிமுறைகளை மீறியதற்காக இரண்டு கிரீஸ் சரக்கு கப்பலை சிறைப்பிடித்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.
ஆனால் சிறைப்பிடிக்கப்பட்ட இரண்டு கிரீஸ் கப்பல்கள் எத்தகைய விதிமுறை மீறல்களை செய்தது என்பதை தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து ஈரானின் சிறைப்பிடிப்பு நடவடிக்கைக்கு பதிலளித்த கிரீஸ், ஈரானின் இந்த நடவடிக்கை கடற்கொள்ளையரின் செயல்பாடுகள் போல் இருப்பதாக தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் வீரர்கள் மீது ரஷ்யா பயன்படுத்திய பயங்கர ஆயுதம்: குலைநடுங்க வைக்கும் வீடியோ காட்சிகள்!
மேலும் கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஈரான் படையினர் விமான ரோந்து நடவடிக்கை என்ற பெயரில் ஆயுதமேந்திய வீரர்களை கப்பலின் மீது குதிக்க செய்து இருப்பது கண்டிக்கதக்கது என தெரிவித்துள்ளது.