சென்னை: கன்னியாகுமரியில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலை போல், கருணாநிதியின் ஆட்சித்திறனும் அவரின் புகழும் உயர்ந்து நிற்கின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள மடல்:
தமிழகத்தின் மூத்த தலைவராகவும், திராவிட இயக்க நெடும்பயணத்தில் முக்கால் நூற்றாண்டுக்கு மேல் ஓய்வின்றி உழைத்தவருமான கருணாநிதிக்கு தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிலை மே 28-ல் (இன்று) திறக்கப்படுகிறது. இது அனைவருக்கும் தித்திப்பான, மகிழ்ச்சி பரவிடும் நாள். கருணாநிதியை தமிழக மக்கள் 5 முறை முதல்வராக பொறுப்பேற்கச் செய்தனர். தமிழகத்தில் அதிக ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்தவர் என்ற பெருமையும் அவருக்கே உரியது.
ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பு வகித்தபோது சென்னை அண்ணா சாலையில், எந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைத்தாரோ அதே இடத்தில் அவருடைய சிலையை, என் தலைமையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்துவைக்க உள்ளார். இதைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் கலைவாணர் அரங்கில் நடக்க உள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சியில் மவுண்ட் ரோடு என பெயரிடப்பட்ட சென்னையின் இதயப் பகுதிக்கு அண்ணா சாலை என்று பெயர் சூட்டியதே கருணாநிதிதான். அறிஞர் அண்ணாவுக்கு, அண்ணா சாலையில் சிலை அமைய காரணமும் கருணாநிதிதான். பெரியாருக்கு சிம்சன் அருகில் சிலை வைத்ததும் அவர்தான்.
தமிழகத்தின் பெருந்தலைவர்களுக்கு அண்ணா சாலையில் சிலை அமைக்க காரணமாக இருந்த கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என்பது பெரியாரின் எண்ணம். பெரியார் மறைந்த பின், மணியம்மையார் முயற்சி எடுத்து திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டது. 1987-ல் எம்ஜிஆர் மறைந்தபோது, திராவிட அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களால் அன்றைக்கு காவல்துறை ஆதரவுடன் கருணாநிதி சிலை தகர்க்கப்பட்டது. யாரோ ஒருவர் தலைவரின் சிலையைத் தகர்க்கும் புகைப்படம் நடுநிலை இதழ்களில் வெளியாகி, தமிழகத்தை கலங்க வைத்தது.
அந்த அண்ணா சாலையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கருணாநிதியின் சிலை நிறுவப்படுகிறது. தனிப்பெரும் சாதனையாளரான அவருக்கு சிலை திறக்கும் நிகழ்வு சென்னையில் மகத்தான விழாவாக நடக்கிறது. கன்னியாகுமரியில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலை போல், கருணாநிதியின் ஆட்சித்திறனும் அவரது புகழும் உயர்ந்து நிற்கின்றன. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி சரித்திரத்தில் தனக்கான இடத்தை கடைசிவரை போராட்டம் வழியாகவே பெற்ற தலைவருக்கு அரசின் சார்பில் சிலை திறக்கப்படுவதை எண்ணி நானும் மகிழ்கிறேன் என்றார்.