சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணையவழி சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு நாளை (மே 29) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
நாளைய இந்தியாவை வளமானதாகவும், அறிவியல் சிந்தனையோடும் வளர்த்தெடுக்க வேண்டுமென்று விரும்பியவர் மறைந்த அப்துல் கலாம். இளைய தலைமுறையினரிடம் உரையாடும் போதெல்லாம் தொடர்ந்து இதை வலியுறுத்தி வந்தவர். கலாமின் மறைவுக்குப் பின்னர், அவரது அறிவியல் சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
அந்த வகையில், நாளை மாலை 6 மணிக்கு ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணையவழி கலந்துரையாடல் நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வில், ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு, மூத்த விஞ்ஞானியும் சத்தீஸ்கர் அமிட்டி பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் டபிள்யூ.செல்வமூர்த்தி பங்கேற்று, கலந்துரையாட உள்ளனர்.
இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் சிறப்பான பங்களிப்பு குறித்தும், அப்துல் கலாமோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பற்றியும் இந்தக் கலந்துரையாடலில் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடைகளை அனுப்பும் 25 பார்வையாளர்களுக்கு ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபுவின் புத்தகங்கள் வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்புவர்கள் https://www.htamil.org/00064 என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளவும்.