லண்டன்: ”வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் இந்தியா – பிரிட்டன் இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும்,” என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஜூன் 27ல் ‘பிரிட்டன் – இந்தியா வாரம்’ கடைப்பிடிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக லண்டனில் நடந்த அறிமுக நிகழ்ச்சியில் பியுஷ் கோயல் பேசியதாவது: ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தியா பரஸ்பரம் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை சமீபத்தில் செய்து கொண்டது.
அதுபோல கனடாவும் ஒப்பந்தம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து பேசி வருகிறது. பிரிட்டன் – இந்தியா இடையே சில பொருட்களை பரஸ்பரம் வரியின்றி இறக்குமதி செய்வது தொடர்பாக இதுவரை மூன்று கட்ட பேச்சு நடந்துள்ளது. நான்காவது கட்ட பேச்சு, ஜூன் 13ல் பிரிட்டனில் நடக்க உள்ளது.
தீபாவளி பண்டிகைக்குள் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னணி வகிக்கிறது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், இந்தியா – பிரிட்டன் இடையிலான பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்க துணைபுரியும்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement