புதுடில்லி: டில்லியில், வளர்ப்பு நாயால் ஐ.ஏ.எஸ்., தம்பதியர் இரு வேறு மாநிலங்களுக்கு பணியிட மாற்றதிற்கு ஆளாகியிருப்பது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
டில்லியில், வருவாய் துறை முதன்மை செயலராக, சஞ்சீவ் குமார் ஐ.ஏ.எஸ்., உள்ளார். இவர் மனைவி ரின்க்கு துக்கா, ஐ.ஏ.எஸ்., டில்லியில் நிலம் மற்றும் கட்டடத் துறை செயலராக உள்ளார். தம்பதிகள் பணி முடிந்த பின் வளர்ப்பு நாயுடன் வீட்டருகே உள்ள அரசின் தியாகராஜ் விளையாட்டு அரங்கில் நடை பயிற்சி செல்வது வழக்கம்.
அப்போது விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது தம்பதியரின் தனிமைக்கு இடைஞ்சலாக இருந்துள்ளது. அதனால் விளையாட்டு அரங்கை வழக்கத்தை விட முன்னதாகவே மூடும்படி, காவலாளியிடம் தம்பதியர் கூறியுள்ளனர். இதன்படி விளையாட்டு அரங்கம் முன்னதாகவே மூடப்பட்டு, அதன்பின் தம்பதியர் நாயுடன் நடைபயிற்சி சென்றுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பயிற்சி வீரர்கள் விளையாட்டு அரங்க நிர்வாகியிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்த தகவல் நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் வெளியானது. அடுத்த சில மணி நேரங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்த தம்பதியரை பணியிட மாற்றம் செய்து டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி சஞ்சீவ் குமார், லடாக்கிற்கும், ரின்க்கு துக்கா, அருணாச்சல பிரதேசத்திற்கும் துாக்கி அடிக்கப்பட்டுள்ளனர். டில்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. அத்துடன் நையாண்டி ‘மீம்ஸ்’ களும் பரவி வருகின்றன. ஒருவர் ‘நான் எங்கே, யாருடன் போவது’ என நாய் கேட்பது போன்ற படத்தை பதிவிட்டுள்ளார்.
இன்னொருவர் நாயின் இரண்டு காலையும் எதிரெதிர் திசையில் வைத்து எங்கு போவது என, நாய் குழம்புவதாக கூறியுள்ளார். மற்றொருவர் அமிதாப் – ஹேமாமாலினி நடித்த ‘பக்பன்’ படத்தில், ‘நான் இங்கு வந்து சேர்ந்து விட்டேன், நீங்கள் அங்கு சேர்ந்தீர்களா’ என்ற வசனத்தை பதிவேற்றியுள்ளார்.
Advertisement