கோடி புண்ணியம் தந்திடும் `கோதூளி' வழிபாடு பற்றித் தெரியுமா?

பசுவினுடைய‌ உடல் முழுவதும் தேவர்கள் விரும்பி வாசம் செய்கின்றனர் என்பதால் அது புண்ணிய வழிபாட்டிற்குரிய தேவதையாக விளங்குகிறது. அதைப்போல அதனுடைய கால் குளம்புகளும் மிகவும் போற்றுதலுக்குரியது.‌

கோதுளி” வழிபாடு

நமது புண்ணிய பூமியில் பசுக்கள் பூஜித்த தலங்கள் ஏராளம். அவற்றிலும் பசுக்களின் கால் குளம்புச் சுவட்டினைத் தமது சிரசிலேயே ஏற்ற நிலையில் அருளும் மூலஸ்தானத்து சிவலிங்கத் திருமேனிகள் சிறப்பானவை.

இவற்றிலிருந்து பசுக்களின் குளம்புகளின் சிறப்புகளை  அறியலாம். இவ்வகையில் கோரூபாம்பிகையின் கால் குளம்புச் சுவட்டினை ஏற்றமையால் ‘குளம்பியநாதர்’ என்ற நாமத்துடன்  அருள்பாலிக்கும் மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை அருகேயுள்ள ‘ஸ்ரீ கோகணேஸ்வர ஸ்வாமி’  ஆலயம்  குறிப்பிடத்தக்கது. 

இவ்வூரின் பெயரே ‘திருக்குளம்பியம்’ ஆகும். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பந்தநல்லூர் ‘ஸ்ரீ பசுபதீஸ்வரர்’ ஆலயத்தில் அருளும் ஈசனும் இத்தகு குளம்பீசர்தான்.

பசுக்களினுடைய நகம் போன்ற பாதமானது ‘குளம்பு’ எனப்பெறுகின்றது.  இக்குளம்பில் பட்ட நீர், மண் அல்லது தூசு போன்றவைகளுக்கு  ‘கோதூளி’ என்பது பெயர். பகல் நேரத்தில் மேய்ச்சலில் இருக்கும் பசுக்கள் அந்தி நேரத்தில் தத்தமது இருப்பிடம் நோக்கித் திரும்பிடும் காலத்திற்கு ‘கோதூளிகா காலம்’ என்பது பெயர். இறை வழிபாட்டிற்கும், புண்ணிய காரியங்கள் செய்வதற்கும் ஏற்ற காலம் இந்த கோதூளி காலம்.‌ அதே போல, பசுக்கூட்டம் மேய்ச்சலுக்குப் புறப்படும் இளங்காலை நேரமும் இவ்விதத்தில்  புனிதமானதாகப் போற்றப்படுகிறது.

கோதுளி” வழிபாடு

இக்காலத்தில் கூட்டமாகச் செல்லும் பசுக்களின் குளம்புகளிலிருந்து கிளம்பும் மண்புழுதி அதீத விசேஷமானது. இதற்கு ‘கோதூளி’ என்பது பெயர். இந்தக்  கோதூளி நம் உடலின் மீதுபடுவதால் சகல தோஷங்களும், வியாதிகளும், பாவங்களும் மறைகின்றன என்பது ஐதீகம். பல புண்ணிய நதிகளில் நீராடுவதைவிட மேம்பட்ட புண்ணியத்தினை அளித்திட வல்லது இந்த கோதூளி வழிபாடு. முக்கியமான காரியங்களை இந்த கோதூளி காலத்தில் செய்வது பலமடங்கு  புண்ணிய பலன்களை அள்ளித் தந்திடும். தவிர, இந்த கோதூளி லக்ன காலத்தில்  ஆற்றப்பெறும் செயல்களுக்கு நாள், நட்சத்திரம், கிழமை, வார தோஷங்கள் கிடையாது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.