‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்

கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து, அதன்மீதான கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம் வழியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுணக்கமாக இருக்கக் கூடாது என சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார் சுகாதாரத்துறை செயலர்.
image
அவர் எழுதியுள்ள கடிதத்தில், `சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, பெருங்குடி, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களிலும் சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு மெல்ல சீராக அதிகரித்து வருகிறது. கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று ஏற்படுவது மட்டுமல்லாமல், ஆங்காங்கே நிகழ்ச்சிகள், நிகழ்வுகளில் பங்கேற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியிலும் தொற்று பரவுகிறது. இதுவரை கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றாலும் இந்த நிலையில் தொடர்ந்தால், இணை நோய்கள் உள்ளவர்களும் முதியவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படலாம். அவர்கள் பாதிக்கப்பட்டால், நிலைமை இதே போன்று இருக்காது.
இதையும் படிங்க… முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
தொற்று அதிகரிப்பு என்பது சமூகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்பதற்கான மறைமுக குறியீடாகும். தமிழ்நாட்டில் இதுவரை 93.74% முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 82.55% இரண்டாவது தவணை செலுத்தியுள்ளனர். எனினும் 43 லட்சம் பேர் இன்னும் ஒரு டோஸ் கூட செலுத்தவில்லை. 1.22 கோடி பேர் இரண்டாவது தவணை தவறவிட்டுள்ளனர். 13 லட்சம் பேர் பூஸ்டர் செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள். இவர்கள் அனைவரும், அவரவர்களுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ள நாம் ஊக்குவிக்க வேண்டும்.
image
நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் கூட்டங்களுக்கு நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தடுக்க வேண்டும். சுகாதார மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அனைவரது ஒத்துழைப்பும் தேவை. கண்காணிப்பு பணிகளை ஆட்சியர்கள் தீவிரப்படுத்தவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.