சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
தென்னிந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரான திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். 60 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். பன்முகத் திறமை பெற்றிருந்த கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, சட்டப்பேரவையில் கடந்த ஏப்.26-ம் தேதி 110-வது விதியின்கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி இனி, அரசு விழாவாக கொண்டாடப்படும். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் கலைமிகு சிலை நிறுவப்படும்’’ என்று அறிவித்தார். அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் கருணாநிதி சிலை நிறுவ இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில், பொதுப்பணித்துறை சார்பில் 12 அடி உயர பீடத்தில், 16 அடிஉயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலையின் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார். சிலை திறப்பு முடிந்ததும் கலைவாணர் அரங்கத்தில் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதியை சிறப்பித்து போற்றும் வகையில், தமிழக அரசின் சார்பில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது. 28-ம் தேதி (இன்று) மாலை 5.30 மணி அளவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் விழாவில், கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் உரையாற்றுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை ஆற்றுகிறார்.
அரை நூற்றாண்டு கால தமிழக அரசியலின் மையமாக திகழ்ந்தவர் கருணாநிதி. 5 முறை தமிழகத்தின் முதல்வராக பணியாற்றியவர். கதை, கவிதை, புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், நாடகம் என, தான் தொட்ட அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர். அரசியலிலும், ஆட்சியின் ஆளுமையிலும் தன்னிகரற்ற தனிப் பெருந்தலைவராக வலம் வந்தவர் கருணாநிதி.
இந்தியாவுக்கே பல முன்னோடித் திட்டங்களை தந்தவர். நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களை போற்றி திருவுருவச் சிலைகளும், அழகிய மணிமண்டபங்களும் அமைத்தவர். ஏழை எளியோர் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற திட்டங்களைத் தந்தவர். இளம் வயது தொடங்கி, இறப்பிலும் போராடி வெற்றி கண்டவர். எந்நாளும் இறவாப் புகழுக்கு சொந்தமானவர்,
உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருப்பவர். மறைந்தாலும் தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்துள்ள கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரை ஆற்றுகிறார். அதைத்தொடர்ந்து, கருணாநிதி பற்றிய சிறப்பு காணொலித் தொகுப்பு திரையிடப்படுகிறது. இறுதியாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு நன்றியுரை ஆற்றுகிறார்.
விழாவில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி அண்ணா சாலை மற்றும் கலைவாணர் அரங்கத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.