விறுவிறு பணிகள்! நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் ஆலை 2023க்குள் தயாராகும்!

நெம்மேலியில் கூடுதலாக அமைக்கப்படும், கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் ஆலை கட்டுமான பணி வேகமெடுத்துள்ளது. இந்த ஆலை ஒரு நாளைக்கு 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை (எம்எல்டி) சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஓர் ஆலை ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் கடல் நீர் குடிநீராக சுத்திகரிக்கப்படுகிறது. தென் சென்னை பகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, திருவான்மியூர், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், பெருங்குடி, வேளச்சேரி, கொட்டிவாக்கம், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களுக்கு இந்த நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் கூடுதல் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு, நெம்மேலியில், 1,259.38 கோடி ரூபாயில், கூடுதலாக, 15 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கான கட்டுமானப் பணிகள் 2021-ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பொது முடக்கத்தால் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்தநிலையில் தற்போது பணிகள் தீவிரம் பெற்றுள்ளன. இதுவரை 50% பணிகள் முடிவடைந்துள்ளன.

நெம்மேலி கூடுதல் சுத்திகரிப்பு நிலைய குடிநீர் பயன்பாட்டுக்கு வந்தால், வேளச்சேரி, உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், சோழிங்கநல்லுார், ஆலந்துார், பரங்கிமலை, பல்லாவரம் பகுதியில் போதிய குடிநீர் கிடைக்கும். அந்த வகையில், இங்குள்ள, ஒன்பது லட்சம் பேர் பயன் அடைவர்.

ஆதாரங்களின்படி, ஆலை 2023 க்குள் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆலையில் இருந்து பல்லாவரம் வரை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விநியோகிக்க 47.35 கிமீ தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணி 80% முடிந்துவிட்டது. மீதி இடங்களிலும், ஓரிரு மாதங்களில் குழாய் பதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முட்டுக்காடு அருகே நடைபெறும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் செயலர் ஷிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை பார்வையிட்டு, கூடுதல் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை ஈடுபடுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.