புதுடில்லி : திருமணம் செய்து கொள்வதாக கூறி, 300க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்தவர்கரூபா கலுாம்ஜெ, 38. இவர், தெற்கு டில்லி கிஷண் கார்க் என்ற இடத்தில் தங்கியிருந்தார்.
திருமண வலைதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், கனடாவில் குடியேறிய இந்தியர் என தன்னை அறிமுகம் செய்து, திருமணம் செய்து கொள்வதாக பல பெண்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார். நாளடைவில் அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் வசிக்கும் ஒரு பெண் இவரிடம் ஏமாந்துள்ளார். இந்தப் பெண் கொடுத்த புகாரின் படி,போலீசார் விசாரணை நடத்தி கரூபாவை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், 300க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. நைஜீயாவில் இருந்து 2019 பிப்ரவரியில் டில்லி வந்த கரூபா, மனித முடி வியாபாரத்துக்காக ‘விசா’ பெற்றுள்ளார். பின், மருத்துவ சிகிச்சை எனக்கூறி மார்ச் மாதம் மீண்டும் வந்துள்ளார். அதன்பின், டில்லியிலேயே இடம் மாறி தங்கி மோசடிசெய்துள்ளார்.
இங்கிருந்து தன் குடும்பத்தினருக்கு வங்கி இணையதளம் வாயிலாக பணம் அனுப்பியுள்ளார். அவரிடம் இருந்து, ஏழு பாஸ்போர்ட்கள், மொபைல் போன்கள், ஏ.டி.எம்., கார்டுகள், ‘இன்டர்போல்’ மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை ஆகியவை பெயரில் போலி கடிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Advertisement