புதுடெல்லி: பஞ்சாப்பில் டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு சதவீதம் கமிஷன் கேட்டதால், சுகாதாரத் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜய் சிங்லாவை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பஞ்சாப்பில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இக்கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதல்வர் பதவியை வகித்து வருகிறார். ஊழலுக்கு எதிராக இவர் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.இந்நிலையில், இவருடைய அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜய் சிங்லா, டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு சதவீதம் கமிஷன் கேட்டு வசமாக சிக்கினார். அவரை பதவி நீக்கம் செய்த பகவந்த் மான், கைது செய்யவும் உத்தரவிட்டார்.அதன்படி, கைது செய்யப்பட்ட அவரை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மொகாலி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த காவல் முடிந்ததை தொடர்ந்து, நேற்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்த மாதம் 10ம் தேதி வரையில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவரிடம் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பர்தீப் குமாரும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரையும் ஜூன் 10 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.