பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
அதிகளவில் பக்தர்கள் வருவதால் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் 25 ஆயிரம் பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை இதர சேவைகள் மூலமாக தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழக பக்தர்கள் நடைபாதை வழியாக தரிசனத்திற்கு அதிக அளவில் வருகின்றனர். இதனால் பக்தர்களை தங்கவைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வைகுண்டம் காம்ப்ளக்சில் 33 குடோன்களிலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கோவிலுக்கு வெளியே நீண்ட தூரம் பக்தர்கள் தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். இதனால் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 73,358 பேர் தரிசனம் செய்தனர். 41,900 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.11 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.