ஏற்காடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மாருதி வேன் திடீரென்று தீப்பிடித்து உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு கோடை விழா கடந்த 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கொடை விழாவிற்கு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் மகுடஞ்சாவடி பகுதியை சேர்ந்த சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் நியாஸ் ஆகிய இருவரும் ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்ல மாருதி வேனில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது ஏற்காடு பிரதான சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது திடீரென்று என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்டதும் வேனில் இருந்த இருவரும் உடனடியாக கீழே இறங்கிய நிலையில், வேன் முழுவதும் தீப்பற்றி மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வேன் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது.