தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். 2009 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். யோகி ஆதித்யநாத் கடந்த முறை உ.பி முதல்வராக இருந்தபோது, முனிராஜ் பல முக்கிய மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.
அதிரடி நடவடிக்கையால் அங்குள்ள மக்களால் ‘சிங்கம்’ என்று அன்பாக அழைக்கப்படுகிறார். காசியாபாத் எஸ்.எஸ்.பியாக இருந்த பவன்குமார் ஐ.பி.எஸ் அங்கு குற்ற சம்பவங்களை குறைக்க நடவடிக்கை எடுக்காததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து ஏப்ரல் மாதம், முனிராஜை காசியாபாத் மாவட்டத்தின் தற்காலிக எஸ்.எஸ்.பியாக நியமித்து உத்தரவிட்டது உ.பி அரசு. அவர் பதவியேற்ற நேரத்தில் வழிப்பறி கொள்ளை, சங்கிலி பறிப்பு என்று காசியாபாத் முழுவதும் க்ரைம் ரேட் எகிறிக் கொண்டே இருந்தது.
முனிராஜ் ஏற்கெனவே காசியாபாத்தில் பணியாற்றியுள்ளார். இதனால், கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றது முதல் நேரடி கள ஆய்வுகள் மூலம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கணவனை இழந்த பெண் ஓருவரின் நிலத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, ஒரு நில அபகரிப்பு மாஃபியா ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுகுறித்து முனிராஜிடம் புகார் கொடுத்த அதே நாளில் நிலத்தை அந்தப் பெண்ணுக்கு மீட்டு கொடுத்திருக்கிறார்.
இதுபோன்ற நடவடிக்கைகளால், முனிராஜை காசியாபாத் முழுநேர எஸ்.எஸ்.பியாக நியமித்து உ.பி அரசு உத்தரவிட்டுள்ளது. முனிராஜ் கடந்தாண்டு தேர்தல் பிரிவுக்கு மாற்றப்பட்டார். கடந்தாட்சியில் வழங்கிய முக்கிய அசைமென்ட்களை திறம்பட செய்திருக்கிறார். அந்த வகையில் யோகி, மீண்டும் முதல்வராக பதவியேற்றதும் முனிராஜ்க்கு வழங்கப்பட்ட முதல் அசைன்மென்ட் இதுதான்.
இதுகுறித்து முனிராஜ் கூறுகையில், “பிரச்னைகள் நடக்கும் முக்கிய பகுதிகளில் சிறப்புப் படையினர் மூலம் கண்காணித்து வருகிறோம். சி.சி.டி.வி இல்லாத இடங்களில் உடனடியாக, கேமராக்களை பொருத்த முடிவு செய்திருக்கிறோம். ஆக்கிரமிப்பு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும், தனியாக சைபர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்கள் அங்கேயே சைபர் தொடர்பான புகார்களையும் அளிக்கலாம்.” என்றார்.