போதைப்பொருள் வழக்கில் இருந்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் எந்தெந்த காரணங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நின்றிருந்த ஒரு சொகுசுக் கப்பலில் போதைப்பொருளை சிலர் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் மும்பை போதைப்பொருள் தடுப்புப் படையினர் (என்சிபி) அங்கு சென்று ஏராளமான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், அதனை பயன்படுத்தியதாக 20 பேரை கைது செய்தனர். அவர்களில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர்.
ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. போதைப்பொருட்களை பயன்படுத்துதல்; அவற்றை விநியோகம் செய்தல் உட்பட பல்வேறு பிரிவுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அவர் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு 26 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, இந்த விசாரணையில் மும்பை என்சிபி அதிகாரிகள் பல குளறுபடிகளில் ஈடுபடுவதாக கூறி இவ்வழக்கு டெல்லி என்சிபி-க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை டெல்லி என்சிபி அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர். அதில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 பேரில் 14 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ஆர்யன் கான் உட்பட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரமில்லை எனக் கூறி அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டதற்கு ஒருதரப்பு ஆதரவும், ஒருசாரார் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பணமும், செல்வாக்குமே ஆர்யன் கான் விடுவிக்கப்பட காரணம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில், ஆர்யன் கான் விடுவிக்கப்படுவதற்கு டெல்லி என்சிபி வட்டாரங்கள் சில காரணங்களை தெரிவித்திருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
1. சம்பந்தப்பட்ட சொகுசுக் கப்பலில் சோதனை செய்யப்பட்டபோது வீடியோ எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆர்யன் கான் போதைப்பொருள் வைத்திருந்ததற்கான எந்த வீடியோவும் மும்பை என்சிபியிடம் இல்லை.
2. ஆர்யன் கானின் செல்போனை பறிமுதல் செய்து அவற்றை சோதித்து பார்ப்பதற்கு மும்பை என்சி அதிகாரிகள் சட்டப்பூர்வ நடைமுறையை பின்பற்றவில்லை.
3. ஆர்யன் கானின் வாட்சப் சாட்டுகளில் அவர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்ததற்கான ஆதாரமோ, அவற்றை சப்ளை செய்ததற்கான ஆதாரமோ கண்டறியப்படவில்லை.
4. ஆர்யன் கான் போதைப்பொருளை பயன்படுத்தினார் என்பதை நிரூபிக்க மருத்துவப் பரிசோதனைகள் எதையும் மும்பை என்சிபி சார்பில் மேற்கொள்ளப்படவில்லை.
5. சொகுசுக் கப்பலில் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதை தான் பார்க்கவில்லை என ஆர்யன் கானுடன் கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், வெற்று காகிதத்தில் ஆர்யன் கானை மும்பை என்சிபி அதிகாரிகள் கையெழுத்திட வைத்ததாகவும், ஆரம்பம் முதலே அவரை இந்த வழக்கில் சிக்க வைக்க அதிகாரிகள் குறியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
6. ஆர்யன் கானுக்காக அவரது நண்பர் அர்பாஸ் கான் போதைப்பொருட்களை வைத்திருந்ததாக மும்பை என்சிபி தெரிவித்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM