சென்னை: தமிழக அரசு உடனடியாக கடலூரில் சேதப்பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளின் பாதிப்பை கணிக்கிட்டு, அதற்கான இழப்பீடை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை சாகுபடி செய்வது தமிழகத்தில்தான்.
இச்சூழலில், கடலூர் மாவட்டம் ராமபுரம், சாத்தக்குப்பம், கீழ்காமபுரம், உதயடிகுப்பம், காட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த சூறைக்காற்றால், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. குறிப்பாக, சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான குலை தள்ளிய வாழைகள் நிலை குலைந்து முறிந்து விழுந்துள்ளன. மிகவும் சிரமத்திற்கிடையில் சாகுபடி செய்து கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில், வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால், விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், பாதிப்பும் அடைந்துள்ளனர்.
இன்னும், ஓரிரு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் வாழைகள் முறிந்து விழுந்ததால், கடன் வாங்கிய பணத்திற்கு வட்டியை எப்படி கட்டுவது என்று தெரியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர். ஒரு ஏக்கரில் வாழைகள் பயிரிடப்படுவதற்கான உற்பத்தி செலவு ரூ.4 லட்சம் முதல் 4.5 லட்சம் வரை செலவாகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக சேதப்பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளின் பாதிப்பை கணிக்கிட்டு, அதற்கான இழப்பீடை போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
அதோடு விவசாய காப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும். எதிர் வரும் காலங்களில், இயற்கை சீற்றங்களால் மழை மற்றும் சூறாவளி காற்றிலிருந்து, வாழை மரங்களை எவ்வாறு காப்பது போன்ற செயல்திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தி, இதுபோன்ற இழப்புகள் இனிமேல் ஏற்படாமல் காக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.” என்று கூறியுள்ளார்.