சென்னை: “பத்திரிகையாளர்கள் மரியாதையோடு நடத்தப்பட வேண்டும்” என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மநீமவின் இந்த அறிவுறுத்தல் கவனம் பெறுகிறது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அண்மைக்காலமாக பத்திரிகையாளர்களை சிறுமைப்படுத்துவதும், அச்சுறுத்துவதும் அடிக்கடி நிகழ்கிறது.
பத்திரிகையாளர்களின் கேள்விகள் தர்மசங்கடம் அளித்தால், அவற்றைத் தவிர்க்கலாமே தவிர, செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல. ஊடகவியலாளர்கள் மரியாதையோடு நடத்தப்படவேண்டியது அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தி.நகர் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, பத்திரிகையாளர்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது கவனிக்கத்தக்கது.