சென்னையில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைத்தார்.

திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். 60 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திருவாரூரில் முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும் என்பதையும் அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று அறிவித்தார்.

இதன்படி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் கருணாநிதி சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.

இந்த சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நேரலை இங்கே:

கருணாநிதி குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரை நூற்றாண்டு கால தமிழக அரசியலின் மையமாக திகழ்ந்தவர் கருணாநிதி. 5 முறை தமிழகத்தின் முதல்வராக பணியாற்றியவர். கதை, கவிதை, புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், நாடகம் என, தான் தொட்ட அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர். அரசியலிலும், ஆட்சியின் ஆளுமையிலும் தன்னிகரற்ற தனிப் பெருந்தலைவராக வலம் வந்தவர் கருணாநிதி.

இந்தியாவுக்கே பல முன்னோடித் திட்டங்களை தந்தவர். நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களை போற்றி திருவுருவச் சிலைகளும், அழகிய மணிமண்டபங்களும் அமைத்தவர். ஏழை எளியோர் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற திட்டங்களைத் தந்தவர். இளம் வயது தொடங்கி, இறப்பிலும் போராடி வெற்றி கண்டவர். எந்நாளும் இறவாப் புகழுக்கு சொந்தமானவர். உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருப்பவர். மறைந்தாலும் தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளவர் கருணாநிதி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.