பா.ம.க தலைவராக அன்புமணி தேர்வு: பொதுக்குழுவில் அறிவிப்பு

திருவேற்காட்டில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜி.கே மணி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பாமக புதிய தலைவராக அன்புமணி ராமதாஸை முன்மொழிந்து தலைவர் ஜி கே மணி பேசினார். இதைத் தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் பாமகவின் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பாமக தலைவராக ஜி கே மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவருக்கு சமீபத்தில் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அன்று முதலே, கட்சிக்கு புதுப்பொலிவு அளிக்கும் வகையில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற பேச்சு நிலவி வந்தது. அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு தலைவர் பதவி வழங்க வேண்டும் என மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வற்புறுத்தி வந்ததாக கூறப்பட்டது.

அதன்படி, பாமக இளைஞரணித் தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக பொதுக்குழுவில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்புமணி தலைவராக அறிவிக்கப்பட்டதும், மிகுந்த உற்சாகத்துடன் கைத்தட்டிய தொண்டர்கள், ‘ஆளப்போகிறான் பாட்டாளி’, ‘2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்ற கோஷங்களை எழுப்பினர்.

மத்திய மாவட்ட செயலாளர்கள் கே.என்.சேகர், தலைவர் அனந்த கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி வாள் பரிசளித்தனர்.

அன்புமணியை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்டிப் தழுவி கண்ணீர்மல்க தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

2004- 2009 ஆம் ஆண்டு காலத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி இருந்தார். அப்போது, பொது இடங்களில் புகைபிடிக்கத் தடைச் சட்டம், 108 ஆம்புலன்ஸ் உட்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.